ரஜினியின் 173வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திதான் இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகினரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறிய பின் பல இயக்குனர்களிடமும் ரஜினி கதை கேட்டார்.
அதில் நித்திலன் சாமிநாதன், பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் சொன்ன கதைகள் அவருக்கு பிடித்திருந்ததாகவும் அவர்களில் ஒருவரை ரஜினி இயக்குனராக தேர்ந்தெடுப்பார் எனவும் செய்திகள் வெளியானது. ஒரு கட்டத்தில் ராம்குமார் பாலகிருஷ்ணனையே ரஜினி டிக் அடித்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான் திடீரென ரஜினியின் 173 வது படத்தை இயக்கப் போவது சிபி சக்கரவர்த்தி என அறிவித்திருக்கிறார்கள். எல்லோரையும் ஓரம்கட்டி சிபிச் சக்கரவர்த்தி எப்படி வாய்ப்பை பெற்றார் என்கிற பின்னணி தற்போது வெளியே தெரிய வந்திருக்கிறது.

ராம்குமார் பாலகிருஷ்ணன், நித்திலன் சாமிநாதன் ஆகியோரின் கதை பிடித்திருந்தாலும் ரஜினிக்கு அதில் முழு திருப்தி ஏற்படவில்லையாம். இதை எப்படியோ சிபி சக்கரவர்த்தி தெரிந்து கொண்டிருக்கிறார். ரஜினி என்ன மாதிரி கதையை எதிர்பார்க்கிறார் என விசாரித்ததில் ‘ரஜினி நிறைய ஆக்சன் படங்களை செய்து விட்டார்.. தற்போது அவர் எதிர்பார்ப்பது செண்டிமெண்ட் கலந்த ஒரு குடும்ப கதை’ என சொல்லப்பட்டிருக்கிறது.
உடனே தனது டீமுடன் அமர்ந்து இரண்டு வாரங்களில் ஒரு கதையை தயார் செய்திருக்கிறார் சிபி. இன்னும் சொல்லப்போனால் இது ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதை என அவர் யாரிடமும் சொல்லவே இல்லையாம். அதன்பின் அந்த கதையை போய் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். ரஜினியோ கதையை கேட்டு மிகவும் உற்சாகமாகி சுமார் 4 மணி நேரங்கள் சிபியுடன் நேரம் செலவழித்திருக்கிறார்.
அதோடு உடனே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் முக்கிய நபரான மகேந்திரனை தொடர்பு கொண்டு ‘சிபி சொல்லியிருக்கும் கதை நன்றாக இருக்கிறது. நீங்களும், கமலும் கதையை கேட்டு சொல்லுங்கள்’ என அனுப்பி வைக்க தற்போது தலைவர் 173 பட வாய்ப்பு சிபிக்கு கிடைத்திருக்கிறதாம்.
