எம்.ஜி.ஆர் கொடுத்த மோதிரத்தை ஷூ காலில் நசுக்கிய நடிகர்!.. அவ்வளவு கோபக்காரரா?!..
திரையுலகில் சில நடிகர்கள் எப்போதும் கோபக்காரார்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பொசுக் பொசுக்கென கோபம் வந்துவிடும். கோபித்துகொண்டு சென்றுவிடுவார்கள். பல நாட்கள் பேசக்கூட மாட்டார்கள். பெரிய நடிகர்களுக்கே இதுபோன்ற கசப்பான அனுபவம் பலமுறை நடந்துள்ளது.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் பெரும்பாலான நடிகர்கள் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் அபிமானியாக இருந்தார்கள். இப்போது அதிமுக - திமுக என்பது போல் அப்போது திமுக - காங்கிரஸ் இருந்தது. சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் காங்கிரஸை ஆதரித்தனர். அதற்கு காரணமாக இருந்தவர் காமராஜர். அவரின் நேர்மை பலருக்கும் பிடித்திருந்தது. காங்கிரஸுக்காக சிவாஜி பிரச்சாரம் கூட செய்தார்.
ஆனால், எம்.ஜி.ஆர் திராவிட கட்சிகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அண்ணாவை அவருக்கு பிடித்திருந்ததால் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அண்ணாவுக்கு பின் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுகவை ஆதரித்தார். அந்த கட்சியில் பொருளாளராகவும் இருந்தார்.
சரி விஷயத்திற்கு வருவோம். எம்.ஜி.ஆர் ‘அரச கட்டளை’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது மதிய உணவு இடைவேளையில் அவரின் அருகில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸ்டண்ட் நடிகர் ராம்சிங் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரிடம் ‘நீங்கள் இருவரும் திமுகவில் இணைந்துவிடுங்கள்’ என சொல்லியிருக்கிறார்.
இது ராம்சிங்குக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. ஏனெனில் அவர் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர். எனவே ‘என்னை எப்படி நீங்கள் திமுகவில் சேர சொல்லலாம்’ என எம்.ஜி.ஆரிடம் வாக்குவதம் செய்தார். எம்.ஜி.ஆர் அவரை எவ்வளவு சமாதானம் செய்தும் அவருக்கு கோபம் அடங்கவில்லை. அப்படத்திலிருந்தும் விலகி விட்டார். பின்னர் அவருக்கு பதில் வேறு நடிகரை வைத்து படம் முடிக்கப்பட்டது. இப்படம் 1967ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்தது.
இப்படத்தின் வெற்றிவிழா மதுரையில் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு ராம்சிங்கையும் எம்.ஜி.ஆர் அழைத்திருந்தார். அப்படத்தில் பணிபுரிந்த நடிகர்களுக்கு தங்க மோதிரம் ஒன்றை எம்.ஜி.ஆர் பரிசாக கொடுத்தார். ராம்சிங்கிற்கும் அவரின் விரலில் எம்.ஜி.ஆர் மோதிரத்தை மாட்டிவிட்டார். ஆனால், அந்த மோதிரத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக கூறி எம்.ஜி.ஆர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சென்று அவரிடம் ராம்சிங் தகராறும் செய்தார். அவரை எம்.ஜி.ஆரால் சமாதானம் செய்ய முடியவில்லை.
எம்.ஜி.ஆரின் கண் முன்னாலேயே அவர் கொடுத்த மோதிரத்தை கழட்டி கீழே தரையில் போட்டு தான் அணிந்திருந்த ஷூ காலால் நசுக்கிவிட்டு கோபமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
எம்.ஜி.ஆரிடம் எந்த நடிகரும் அப்படி நடந்துகொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.