80களில் உருக உருக காதலித்த ஒரு தலை காதல் நடிகர் இப்போது என்ன செய்கிறார்?
நீள்வட்ட அழகிய முகம்...ஆஜானுபாகுவான தோற்றம்...தமிழ், மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகர்...டி.ராஜேந்தரால் அறிமுகமானவர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் சங்கர். இவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
தாய்மொழி மலையாளமே என்றாலும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.
ஒரு தலை ராகம், ராகம் தேடும் பல்லவி படங்களில் நடித்து தனது முழுத்திறனை வெளிப்பட்டவர். தொலைக்காட்சி நடிகர், இயக்குனர், தொழிலதிபர் என பன்முகத்திறமை கொண்டவர்.
1959ல் கேரள மாநிலம் திருச்சூரைப் பிறப்பிடமாகக் கொண்ட திக்கிவெட்டி எம்கே பணிக்கர் மற்றும் சுலோச்சனா பணிக்கரின் செல்ல மகன் தான் சங்கர் பணிக்கர். இவருடன் இந்திரா, கிருஷ்ணகுமார் என்ற இரு சகோதர சகோதரிகள் உள்ளனர்.
தந்தை எம்கே பணிக்கர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மூத்த மேலாளர் ஆக பணிபுரிந்து வந்தார். சென்னைக்கு பணியின் காரணமாக இடம்பெயர்ந்தார். பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தார் சங்கர். இளமையிலேயே கலை ஆர்வம் மிக்கவராக இருந்தார். பள்ளிக் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
தொடர்ந்து பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு கலை ஆர்வம் காரணமாக சென்னைத் திரைப்படக்கல்லூரியில் நடிப்பிற்காக 2 ஆண்டுகாலம் பயிற்சி பெற்றார். 1979ல் ஜெயன், ஷீலா நடிப்பில் ஹரிஹரன் கதை வசனம் இயக்கத்தில் வெளியான சர பஞ்சாரம் என்ற மலையாளப்படத்தின் மூலம் சிறு கதாபாத்திரம் ஏற்று அறிமுகமானார்.
அப்போது பல்கலை வித்தகர் டி.ராஜேந்தர் தனது படத்திற்காக புதுமுக நாயகர்களைத் தேடி வந்தார். இதன் அடிப்படையில் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் அடிப்படையில் சங்கர் 1989ல் டி.ராஜேந்தர் கதை வசனம் எழுதிய இயக்கிய ஒரு தலை ராகம் படத்தில் கதாநாயகன் ஆக நடித்தார்.
மயிலாடுதுறை கல்லூரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகியாக நடித்த சுமத்ராவாக தோன்றிய ரூபாவிற்கு இணையாக ராஜா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தினார் சங்கர். தனது தேர்ந்த நடிப்பால் இவர் அறிமுக நாயகன் போல இல்லாமல் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இளம் ரசிகர்களைக் கவர்ந்தார்.
தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சுமத்ரா என்ற ரூபாவை ஒரு தலையாகக் காதலித்து உருகி தவிக்கும் வேடத்தை ரசிக்கும்படியாகச் செய்தார் சங்கர். இவர் தன்னோட காதலை வெளிப்படுத்தும் போதெல்லாம் தன்னோடா தாயார் மற்றும் குடும்பச்சூழலால் மனதில் விருப்பம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பார் ரூபா.
கடைசியில் தன் காதலை வெளிப்படுத்த வரும் விதத்தில் ரூபா ஓடோடி வந்து சங்கரைக் காண வருகையில் ஒரு தலைக்காதலாக காதலித்து உருகிய சங்கர் இறந்து போவதும் படத்தின் உச்சக்கட்டக் காட்சியாகி ரசிகர்களை உருக்குலையைச் செய்துவிடும்.
1980களில் பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றது. வெள்ளிவிழா கொண்டாடி தமிழக ரசிகர்களை ஆரவாரப்படுத்தியது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் இது என்று சொன்னால் மிகையில்லை. சிறந்த திரைப்படத்திற்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றது.
பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். வாசமில்லா மலரிது, கடவுள் வாழும் கோவிலிலே, கூடையிலே கருவாடு, நான் ஒரு ராசியில்லா ராஜா என்று பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் கீதமாக நினைவில் நின்றன.
தொடர்ந்து பாசில் கதை வசனம் இயக்கத்தில் வெளியான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்ற மலையாளப்படத்தில் பிரதான வேடம் ஏற்று நடித்தார் சங்கர். இது காதல் மற்றும் திரில்லரான படம். இது 6 முறை கேரள மாநில அரசின் விருதை வென்றது. தமிழ், மலையாளப்படங்களின் காதல் இளவரசனாக வலம் வந்தார் சங்கர்.
விஜயனுடன் சுஜாதா, சரிதாவுடன் கோயில்புறா, ரூபாவுடன் மவுன யுத்தம், நடமாடும் சிலைகள், சிவரஞ்சனியுடன் உதயமாகிறது, அருணாவுடன் கானலுக்கு கரையேது, பூர்ணிமா ஜெயராமுடன் புனித மலர் என பல படங்களில் நடித்து நாயகனாக முத்திரைப் பதித்தார்.
ஒரு தலை ராகம் போல அமைந்த மற்றொரு வெற்றி படம் தான் ராகம் தேடும் பல்லவி. இந்தப்படத்தை இயக்கியவரும் டி.ராஜேந்தர் தான். 1982ல் வெளியானது. பல்லவி என்னும் அனுவின் இணையாக நடித்தார்.
இவர் திரைப்படத்தின் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் ஊராரின் கேலிப்பேச்சுக்கு மத்தியிலும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முயன்று வருவார். இதனால் காதலியையும், காதலையும் இழக்கும் துர்பாக்கிய நிலைக்கும் தள்ளப்படுகிறார். இறுதியில் திரைப்படம் இயக்கினாலும் நண்பன் வில்லனாகத் தோன்றிய ராஜீவால் காதலி தற்கொலை செய்து கொள்வதாகக் கதை நகரும்.
பெரும் சோகக் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தார் சங்கர். டி.ராஜேந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் செம மாஸானது. மூங்கிலிலே பாட்டிசைக்கும், ஆழ்கடலில் தத்தளித்த ஆகிய பாடல்கள் அக்காலத்தில் மட்டுமல்ல. இப்போது கேட்டாலும் ரசனை துளியளவும் குறையாது.
தொடர்ந்து தமிழ்த்திரை உலகில் இருந்து முற்றிலும் விலகினார். தாய்மொழியான மலையாளம் பக்கம் சென்றார். அங்கும் முன்னணி நடிகரானார். 1989ல் பாண்டியன், சீதா நடிப்பில் வெளியான காதல் எனும் நதியினிலே படத்தில் கால் பதித்தார்.
பந்தயக்குதிரைகள், எம்ஜிஆர் நகரில் ஆகிய படங்களில் இரண்டாம் நாயகனாக வலம் வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ராந்துடன் நினைத்து நினைத்துப் பார்த்தேன் என்ற படத்தில் தலை காட்டினார். 2015ல் வசந்தகுமார் கதை வசனம் மற்றும் தயாரிப்பில் மணல் நகரம் என்ற படத்தை இயக்கினார்.
இப்படத்தின் அறிமுகவிழாவில் ஒரு தலை ராகம் படத்தில் தன்னுடன் 35 ஆண்டுகளுக்கு முன் தோன்றி நடித்த அனைத்து நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்தார். 1980களில் தமிழ், மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த சங்கருக்கு மணவாழ்க்கை சரிவர அமையவில்லை. 2 மண வாழ்வைக் கடந்தவர் 2013ல் சித்ரா லட்சுமி என்பவரை மணம்புரிந்தார். இவர் நடன ஆசிரியராக வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். கோகுல் என்ற மகன் உள்ளார்.