latest news
படம் ஓகே!.. ஆனால், சித்தார்த் இந்த சிக்கலை ஏன் கவனிக்கல?.. சித்தா விமர்சனம் இதோ!
நடிகர் சித்தார்த் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து நடித்துள்ள சித்தா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கி அருண் குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். மலையாள நடிகையான நிமிஷா சஜயன் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
படத்தின் கதை என்னவென்று பார்த்தால், அண்ணன், அண்ணி, அண்ணனின் மகளுடன் எளிமையான அழகான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஈசு என்கிற ஈஸ்வரன் சித்தார்த். அண்ணன் மகளான சுந்தரியை சேட்டை என்றே செல்லமாக அழைத்து ரொம்பவே பாசமாக வளர்த்து வருகிறார்.
அண்ணன் திடீரென இறந்து விட, அண்ணியையும் அண்ணனின் மகள் சுந்தரியையும் பாதுகாக்கும் அரணாக மாறுகிறார். ஆனால், அதுவே அவரது வாழ்க்கையில் ஏகப்பட்ட வலிகளையும் வேதனையையும் கொடுக்கத் தொடங்குகிறது.
கஷ்டப்படுறவங்களுக்குத் தான் எல்லா கஷ்டமும் வருமா? என்பது போல நெஞ்சத்தை கனக்க செய்து விடுகிறார் அருண் குமார். பள்ளியில் இருந்து சுந்தரியை தான் அழைத்துச் செல்லாமல் அவள் தனியாக சென்றால் கூட சண்டை போடும் ஈஸ்வரன் தான் செல்லமாக வளர்த்து வரும் குழந்தை காணாமல் போவதும், அதற்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதையும் அறிந்தால் என்ன ஆவார்? தனது குடும்பத்திற்காக என்னவெல்லாம் செய்வார் என்பதை ரொம்பவே யதார்த்தமாக வலி மிகுந்த காட்சிகளுடன் நடிகர்களின் நேர்த்தியான நடிப்பால் மனதை ரணமாக்கி விடுகின்றனர்.
டக்கர் படத்தில் ஆட்டு தாடியை வைத்துக் கொண்டு அய்யோ சகிக்கல சாமின்னு ஒரு நடிப்பு நடித்த சித்தார்த்தா இப்படி பின்னி பெடலெடுக்கிறார் என ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுகிறார்.
படமும் நல்லா இருந்தாலும், தயாரிப்பாளராக சித்தார்த் ரிலீஸில் மிகப்பெரிய தவறு செய்து விட்டார் என்றே தெரிகிறது. சந்திரமுகி 2, இறைவன் உள்ளிட்ட பெரிய படங்களுடன் போட்டிப் போடாமல், சிறு படங்களுடன் சித்தாவை ரிலீஸ் செய்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆனால், பெரிய விடுமுறை என்பதால் தனது படத்தையும் மக்கள் பார்ப்பார்கள் என நம்பி வெளியிட்டுள்ள அவரது முயற்சியை பாராட்டி படத்தை மக்கள் தியேட்டரில் பார்த்தால் நிச்சயம் இப்படியொரு படத்தை மிஸ் செய்ய இருந்தோமே என வருத்தம் அடைவார்கள்!..
சித்தா – சிறப்பு!
ரேட்டிங் – 3.75/5.