கலைஞரின் வசனம் பெரிதா? சிவாஜியின் உச்சரிப்பு பெரிதா? இது ஒரு ஆரோக்கிய போட்டி...மக்களின் கருத்து இதோ..!
கலைஞர் சிறந்த எழுத்தாளர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகத்திறமை கொண்டவர். இவரது எழுத்துகளில் வெளியான படைப்புகள் அனைத்தும் சூப்பர்ஹிட் டானவை. கலை, அரசியல் என இரண்டிலும் பின்னிப் பெடல் எடுப்பவர் கலைஞர்.
தனது கடைசி மூச்சு வரை அபார நினைவாற்றலுடன் இருந்தார் என்பது அவரது தனிச்சிறப்பு. அதே போல நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பின் இமயம். இவர் போடாத வேஷங்களே இல்லை எனலாம்.
இவரது கதாபாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு புத்துயிர் ஊட்டுவதில் வல்லவர். இரு இமயங்களும் நெருங்கிய நண்பர்கள். ஆரோக்கியமான போட்டி உடையவர்கள்.
பராசக்தி கலைஞரின் கைவண்ணத்தில் உருவான சிவாஜியின் முதல் படம். முத்தாய்ப்பாக நடிப்பை வெளிப்படுத்தி தமிழ்மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார் சிவாஜி.
1998ல் தமிழ்க்கலை உலகம் சார்பில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பவள விழாவில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேசிய உரையிலிருந்து...
என்னருமை நண்பனைப் பற்றி நான் என்ன சொல்வது? எதைப் பேசுவது?
உங்களைப் பேசினால் நானும் அதோடு சேர்ந்திருப்பேன். அப்போது என்னையே புகழ்ந்து கொள்வதாகுமே..! அதைப் பற்றிப் பேசுவதா? நாம் இருவரும் சிறு பிள்ளையிலே தஞ்சை மாநகரத்திலே தெருத்தெருவாக, சந்தோஷமாக, பொறுப்பே இல்லாமல் அலைந்தோமே..! அதைப் பற்றிப் பேசுவதா?
பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக ஊர் ஊராகத் தெருத்தெருவாக நாடகம் போட்டு வசூல் செய்தோமே..! அதைப் பற்றிப் பேசுவதா? அல்லது அங்கு உணவு கிடைக்காமல் தள்ளாடினோமே..!
அதைப்பற்றிப் பேசுவதா? அல்லது அங்கிருந்து நாம் சென்னை வருவதற்கு பணமில்லாமல் தவித்த போது உங்கள் விரலிலே இருந்த மோதிரத்தை விற்று நாம் வீடு வந்து சேர்ந்தோமே! அதைப் பற்றிப் பேசுவதா?
எதைப் பற்றி ஐயா பேசுவது? பின்னர் நான் சினிமாவுக்கு வந்த பிறகு பராசக்தியில் எழுதினீர்களே, அந்த வசனத்தைப் பேசி நடித்தேனே, அந்தப் படம் வெளிவந்த பிறகு ஒரே இரவிலே வானத்திலே சென்றேனே!
அதைப் பற்றிப் பேசுவதா? ஒரு சமயம் எனக்கு நீங்கள் எழுதிக் கொடுத்த வசனத்தை என்னருமைச் சகோதரர் எஸ்எஸ்ஆர். அவர்களைப் பேச வைத்தீர்களே..! அதைப் பற்றி பேசுவதா? அதற்காக நான் உங்களிடம் கோபித்துக் கொண்டேனே! அதைப் பற்றிப் பேசுவதா?
பிறகு நீ கோபித்துக் கொள்ளாதே கணேசா என்று அரை மணி நேரத்திலே வேறு ஒரு வசனத்தை எழுதிக் கொடுத்தீர்களே! அதைப் பற்றி பேசுவதா? அப்போது உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு போட்டி!
உங்கள் எழுத்து சிறப்பாக இருந்ததா? நான் அதைச் சிறப்பாகப் பேசினேனா என்று? ஆனால் மக்கள் சொன்னார்கள்..இரண்டுமே நன்றாகத் தான் இருந்ததென்று..!
அதைப் பற்றிப் பேசுவதா? எதைப் பற்றிப் பேசுவது? நான் எதைப் பற்றிப் பேசினாலும் உங்கள் கூடவே வந்து கொண்டே இருப்பேனே..! நீங்கள் வாழ வேண்டும்! பல்லாண்டு வாழ வேண்டும்! உங்களை நம்பி கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள்.