ஓவர் ஆக்டிங் என கிண்டலடித்த சோ!.. ரூமுக்கு கூட்டிச்சென்று சிவாஜி என்ன செய்தார் தெரியுமா?..
நாடகங்களில் நடித்து அப்படியே சினிமாவுக்கு வந்தவர் நடிகர் கணேசன். வீர சிவாஜி நாடகத்தில் சிறப்பாக நடித்ததால் அண்ணா இவரை சிவாஜி கணேசன் என அழைத்தார். அதன்பின் அதுவே அவரின் பெயராக நிலைத்துவிட்டது. இவர் நடித்த முதல் திரைப்படம் பராசக்தி. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தார்.
புராணங்களில் மக்கள் படித்த அல்லது கேள்விப்பட்ட கதாபாத்திரங்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். சிவன், கர்ணன், நாரதன், வீர பாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி என பல கதாபாத்திரங்களை மக்களின் மனதில் பதிய வைத்தார். அவருக்குபின் நடிக்க வந்த பலரும் இவரின் பாதிப்பிலிருந்து மீளாதவர்கள்தான்.
அதேநேரம், சிவாஜி மிகையாக நடிக்கிறார் அதாவது ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது பலரும் வைப்பதுண்டு. அவருடன் நடித்த சில நடிகர்களும் அதை கூறியதுண்டு. ஆனால், சிவாஜி தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. ஒருமுறை நடிகர் சோ ராமசாமியுடன் ஒரு படத்தில் சிவாஜி நடித்துக்கொண்டிருந்தார். ஒரு காட்சியில் சிவாஜி நடிப்பை பார்த்து படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் கைதட்டி பாராட்டியுள்ளனர்., ஆனால், சோ மட்டும் அமைதியாக இருந்தாராம். அதை பார்த்துவிட்ட சிவாஜி சோ-வை அங்கிருந்த ஒரு அறைக்க அழைத்து சென்று பேசினாராம்.
‘நான் அடித்த அந்த காட்சி உனக்கு பிடிக்க வில்லை.இல்லையா?’ என சிவாஜி கேட்க ‘ஆமாம் சார். ஓவர் ஆக்டிங் போல இருந்தது’ என்றாராம் சோ. அதற்கு சிவாஜி ‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் நான் பேசுவது பிடித்திருந்ததா?’ என கேட்டாராம். அதற்கும் சோ ‘பிடித்திருந்தது. ஆனால், அதிலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருந்தது’ என சொன்னாராம்.
அப்போது பேசிய சிவாஜி ‘நான் சோவுக்கு பிடிப்பது போல் நடித்தால் மக்களிடம் செல்ல முடியாது. பொதுவான ரசிகருக்கு என ஒரு அளவு இருக்கிறது. அதை கொடுத்தால்தான் நான் மக்களிடம் சென்றடைய முடியும்’ எனக்கூறிவிட்டு அந்த கட்டபொம்மன் காட்சியை நான்கு விதமாக நடித்து காட்டினாராம். ஹாலிவுட் நடிகர் போல் ஒன்றையும், சோ நடித்தால் அந்த காட்சி எப்படி இருக்கும் என்பதையும் சிவாஜி நடித்துக்காட்ட பிரமித்துப்போன சோவுக்கு கண்ணில் கண்ணீரே வந்துவிட்டதாம். அதன்பின் சிவாஜியை எங்கேயும் ஓவர் ஆக்டிங் என சோ சொல்வது இல்லையாம்.
இதையும் படிங்க: உச்சிக்கு வந்தால் இந்த உலகம் நம்மை தீட்டி தீர்க்கும் – சர்ச்சையை கிளப்பிய விக்ரம்..!