நடிகர் திலகம் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் சிவாஜிகணேசன். இவரது நடிப்பைப் பார்த்து தான் பலரும் நடிக்க வருவதற்கு முன் நடிப்பு என்றால் என்ன என்று கற்று வருகிறார்கள்.
யாராலும் நடிக்க முடியாத கடினமான நடிப்பையும் அசால்டாக அதே நேரம் அபாரமாகவும் நடித்து விடுவார் சிவாஜி. உணர்ச்சிகளை முகத்தில் கொண்டு வந்து கொட்டுவதில் அவரை மிஞ்ச ஆளே இல்லை. இவரது அபார நடிப்பைப் பார்த்து இயக்குனர் பிரசாத் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

பூங்கோதை படத்தின் டைரக்டர் நான். அஞ்சலிதேவி அந்தப் படத்தைத் தயாரித்து வந்தார். ஆழ்வார்ப்பேட்டையில் படத்திற்கான ஒத்திகை நடந்து கொண்டு இருந்தது. நான் கவனித்துக் கொண்டு இருந்தேன். என்னைப் பார்க்க ஒருவர் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

அவரது விழிகள் என்னை உடனடியாகக் கவர்ந்து விட்டன. ஆயிரம் கதைகளையும் நூறாயிரம் உணர்ச்சிகளையும் அந்தக் கண்கள் பேசிவிடும் வல்லமை படைத்தவை. வணக்கம் என்று என்னைப் பார்த்து தெரிவித்தார். தெளிவான மனிதர் தன்னம்பிக்கை மிக்கவர் என்பதை பார்த்தவுடனே உணர முடிந்தது.
தொடர்ந்து அவரே பேசினார். என் பெயர் கணேசன். பராசக்தி படத்தில் நடித்து வருகிறேன். பெருமாள் அவர்கள் உங்களிடம் அனுப்பினார் என்று தன்னை அறிமுகப்படுத்தினார். பூங்கோதை பட வாய்ப்புக்காகத் தான் வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.
பெருமாள் எனது நெருங்கிய நண்பர். அவர் சிபாரிசு செய்த நபரை சோதிக்க நான் விரும்பவில்லை. என்றாலும் அவரது விழிகள் என்னை ஒத்திகை பார்க்கத் தூண்டின. பூங்கோதை படத்தின் வசனத்தில் ஒன்றைக் கொடுத்து நடிக்கச் சொன்னேன். ஒரே ஒரு முறை படித்துப் பார்த்தவர் நடித்துக் காட்டும்போது அந்த கதாபாத்திரத்தையே கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.

அதே படத்தின் தெலுங்கு வசனத்தைக் கொடுத்தேன். அவருக்குத் தெலுங்கு தெரியாது. இருந்தாலும் நான் எதிர்பார்த்ததை விட மேலாக உணர்ச்சிகளைக் கொட்டி நடித்ததைப் பார்த்ததும் அசந்துவிட்டேன். தெலுங்குக்காகப் போட்டிருந்த ஹீரோவை ரிஜெக்ட் செய்துவிட்டு சிவாஜிகணேசனையே போட்டுவிட்டேன். கணேசன் எனக்கு நன்றி கூறி விடைபெற்றார்.
கணேசனிடம் நான் கண்டு வியந்த ஒன்று அவரது ஞாபகசக்தி. மனோகராவில் பக்கம் பக்கமாக வசனம் இருக்கும். அவற்றை நொடியில் மனப்பாடம் செய்து உணர்ச்சிகரமாகப் பொழிந்து தள்ளுவார். இதே படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங்கில் தயாரான போது அந்தந்த மொழிகளிலும் மனப்பாடம் செய்து பேசி அசத்தினார். ஜெர்மனியில் வசனத்தை எழுதிக் கொடுத்தாலும் அடுத்த சில நிமிடங்களில் மனப்பாடம் செய்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

சிலருக்கு சில விஷயங்கள் இயற்கையிலேயே அமைந்து விடுவது உண்டு. சிலருக்கு நடிப்பு வரும். ஆனால் வசனத்துடன் இணைந்து வராது. சிவாஜிக்கு இரண்டும் வரும். அது மட்டுமல்லாமல் வசனத்தை ஏற்ற இறக்கத்துடன் அவர் உச்சரிக்கும் அழகோ அழகு தான். !
கணேசனின் முகத்தை மொபைல் பேஸ் என்று சொல்லலாம். சோகத்தில் இருந்து மகிழ்ச்சிக்கோ, மகிழ்ச்சியில் இருந்து வெறுப்புக்கோ, வெறுப்பில் இருந்து கோபத்திற்கோ, கோபத்தில் இருந்து சாந்தத்திற்கோ வரவேண்டுமானால் டக் கென்று வந்துவிடும். இந்த அசாத்திய திறமை அவரிடத்தில் உண்டு.
