காட்சி தத்ரூபமாக வரணும் என இயக்குனர் செய்த உத்தி...உயிரைப் பணயம் வைத்து நடித்த சிவாஜிகணேசன்..!
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக ஒரு காட்சி. அதுவும் தெறிக்க விடும் ஆகஷன் சண்டைக்காட்சி. அதைப் படமாக்கும் போது அந்த அனுபவம் எப்படி இருந்தது என இயக்குனர் பி.ஆர்.பந்துலு சொல்கிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக சண்டைக்காட்சிகளைப் படமாக்க ஜெய்ப்பூருக்குச் சென்றோம். கட்டபொம்மன் குதிரை மீது ஏறி வெள்ளையர்களுடன் எதிர்த்துப் போராடி வரும் தன் படை வீரர்களுக்கு உற்சாகம் அளித்து போரிட்டு வருவதான காட்சியைப் படமாக்கினோம்.
சிவாஜிகணேசன் ஒரு வெள்ளைக்குதிரை மீது உட்கார்ந்திருந்தார். காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று பயங்கரமாக ஏற்பாடுகள் செய்தோம். அதற்காக உண்மையிலேயே சில வெடிகளை வெடிக்கச் செய்திருந்தோம். அதற்காக சண்டை நடக்கும் மையமான இடத்திற்குப் போய் விடாதீர்கள். ரொம்ப ஆபத்து அது என்று சிவாஜியிடம் அன்புக் கட்டளையைப் பிறப்பித்து இருந்தோம்.
சுமார் 2000 பேர்கள் கலந்து கொண்டு சண்டை போட்டார்கள். சிவாஜிகணேசன் குதிரை மீது ஏறி வந்தார். என்ன காரணமோ தெரியவில்லை. குதிரை நாலு கால் பாய்ச்சலில் ஆரம்பித்து உண்மையிலேயே தலை கால் புரியாமல் பறக்க ஆரம்பித்தது. கணேசனால் அதை அடக்கி வழிக்குக் கொண்டு வர முடியவில்லை.
ஷாட் கெட்டு விட்டால் என்ன செய்வது? என்று தன்னால் முடிந்த அளவு குதிரையை வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்தார். அந்த நேரம் பார்த்து துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.
ஏற்கனவே பறந்து கொண்டிருந்த குதிரை சத்தம் கேட்டதும் தலைகால் புரியாமல் பாய ஆரம்பித்தது. அப்படி அது பாய...நாங்கள் கணேசனை எங்கு போக வேண்டாம் என்று எச்சரித்தோமோ குதிரை அங்கு போய் நின்றது.
ஏதாவது அடிபட்டு தவறாக ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தோம். உயிருக்கு ஆபத்தான நிலையில் இப்படி சிக்கி விட்டாரே...அருகிலேயே படப்பிடிப்பைப் பார்த்து வரும் அவரது மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று செய்வதறியாமல் திகைத்து நின்றோம்.
அவரது மனைவியோ திக்பிரமை பிடித்தவர் போல உட்கார்ந்து விட்டார். கணேசனை எங்களால் பார்க்கவே முடியவில்லை. அவர் உருண்டு விழுந்துவிட்டார் என்றே நினைத்தோம்.
ஆவது ஆகட்டும் என்ற படப்பிடிப்பை அப்படியே நிறுத்தினேன். நானும் மற்றவர்களும் கணேசன் இருந்த இடத்தை நோக்கி ஓடிப் போய் பார்த்தோம். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கைகால்கள் எல்லாம் ரத்தம் கொட்ட, ஷாட் நன்றாக வந்ததா? என்று கேட்டார் கணேசன்.
2000 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இக்காட்சியில் என் ஒருவனால் ஷாட் வீணாகி விடக்கூடாதல்லவா? மறுபடியும் இப்படி எடுப்பதென்றால் எவ்வளவு கஷ்டம்! என்று தான் அடிப்பட்டு விழுந்ததற்கு எங்களுக்குச் சமாதானம் சொன்னார் அவர்.
தான் ஈடுபடும் வேலையை சிறப்பாகச் செய்ய தணியாத ஆர்வம் கொண்டவர் தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அதற்காக முழுமனதுடன் உழைக்க வேண்டும் என்பதை நான் இன்றும் சிவாஜியிடம் கண்டு வருகிறேன் எனக்கு அறிமுகமான அந்த நாளிலிருந்து என்கிறார்.