Connect with us

Cinema History

நடிகர் திலகம் ஒரு வேண்டுகோள் வைத்தால் அது இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் கட்டளை…!

எம்ஜிஆர் மக்கள் திலகம் என்றால், சிவாஜி நடிகர் திலகம். இவரைப் பற்றி புகழ்ந்து பேசாத நடிகர்களே இல்லை எனலாம். அந்த வகையில் நடிகர் சிவகுமார் சிவாஜியைப் பற்றி தன் கருத்துகளை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் ஏ.பி.நாகராஜனை அருட்செல்வர் என்றே அழைப்பார்கள். அவர் இயக்கத்தில் வெளியான பக்தி படங்கள் அனைத்துமே தமிழ்த்திரை உலக வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்தவை. அத்தகைய படங்களில் திருமால் பெருமை என்ற அற்புதமான படத்தில் நடிகர் திலகம் பெரியாழ்வார், விப்ர நாராயணன் போன்ற பல கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்திருப்பார்.

கதைப்படி திருமால் வேடம் ஏற்று நானும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அரங்கனுக்கு ஆலயம் அமைக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருமங்கையாழ்வார், போதிய நிதி சேராத காரணத்தால் வழிப்பறிக் கொள்ளையனாக மாறி கொள்ளையடித்து பொருள் சேர்ப்பார்.

Thirumal Perumai

ஆழ்வாருக்குப் பாடம் புகட்ட எண்ணிய திருமால், திருமகளோடு, மணமகன் – மணமகளாக ஊர்வலம் வருவார்கள். திருமங்கையாழ்வார், கல்யாண கோஷ்டியை இடைமறித்து, அவர்கள் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் அபகரிப்பார்.

அப்போது திருமாலின் கால் கட்டை விரலில் அணிந்திருக்கும் மெட்டி போன்ற நகையைக் கழற்றச் சொல்வார். திருமால் தன்னால் அதைக் கழட்ட முடியாதென்றும், திருமங்கையாழ்வாரையே கழட்டி எடுக்கும்படியும் கூறுவார்.

நகையை கைகளால் கழட்ட முயன்று சோர்வடைந்த திருமங்கையாழ்வார் பற்களால் கடித்து எடுப்பதைப் போன்று காட்சி அமைந்திருக்கும். இந்தக் காட்சியை இயக்குனர், திருமங்கையாழ்வார் வாழ்ந்த இடத்திலேயே வெளிப்புறப் படப்பிடிப்பை நடந்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

படப்பிடிப்புக் குழுவினர் சிவாஜியின் வருகைக்காக காத்திருந்தனர். படப்பிடிப்பு நடந்த இடம் மிக மிக மோசமாக மட்டுமில்லாமல், மிகவும் அசுத்தமாகவும் இருந்தது. சுருக்கமாகச் சொல்லணும்னா அந்த இடமே திறந்த வெளிக்கழிப்பிடமாக இருந்தது. நடிகர் திலகம் நினைத்திருந்தால் இந்தக்காட்சியை வேறு இடத்தில் வைத்து எடுக்கலாம் என்று கூறியிருக்கலாம்.

Actor Sivakumar

நான் மிகப்பெரிய கதாநாயகன். சிவகுமாரின் கட்டை விரலில் உள்ள நகையை வாய் வைத்து கடிக்கும் காட்சி வேண்டாம் என்று கூறியிருக்கலாம். அவர் தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னராக இருந்த காலம். அவர் வேண்டுகோளை கட்டளையாக இயக்குனரும், தயாரிப்பாளரும் ஏற்கும் நிலைமை இருந்தது.

ஆனால் நடிகர் திலகம் தன்னை அங்கே சிவாஜியாகவோ, என்னை சிவகுமாராகவோ பார்க்காமல், திருமங்கையாழ்வாராகவும், திருமாலாகவும் பார்த்து, இயல்பாக நடித்தார்.

புராண, இதிகாசங்களை அவர் எந்த அளவிற்கு மதித்துப் போற்றினார் என்பதற்கு, முகம் சுளிக்காமல் இந்தக்காட்சியை, இயக்குநருக்கு முழுமையாக நிறைவு ஏற்படும் வண்ணம் அருமையாக நடித்தார் என்பதே மிகச்சிறந்த உதாரணம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top