Cinema History
எனக்கு வேஷம் இல்லையா?!. இயக்குனரையே மிரட்டிய சோ!.. ராமசாமி ‘சோ’ ஆன கதை இதுதான்!.,.
சட்ட ஆலோசகர், பத்திரிகையாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறன்களைக் கொண்டவர் சோ. இவர் பங்கேற்ற துறைகளில் எல்லாமே வெற்றி பெற்றார். எனது அரசியல் குரு என சோவை பாரத பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டியுள்ளார். தமிழ்த்திரை உலகில் இவர் நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் சுவாரசியமானவை.
சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்த போது சோவின் நாடகங்கள் எல்லோரையும் கவர்ந்தன. அதன்பின் சட்டம் படித்தவர் 6 ஆண்டுகாலம் உயர்நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். அதன்பிறகு நாடக உலகிற்கு வந்தார். அந்தக்காலகட்டத்தில் விவேகானந்தா கல்லூரியில் படித்த தனது நண்பர்கள் எல்லோரையும் இணைத்துக் கொண்டு சோவின் தம்பியான அம்பி ஒரு நாடகக்குழுவைத் தொடங்கினார்.
அந்த நாடகக்குழுவுக்கு விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்னு பேரு. அந்த நாடகக்குழுவிற்காக கூத்தபிரான் எழுதிய நாடகம் தான் தேன்மொழியாள். சோவின் தம்பியான அம்பிக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நாடகத்தை எழுதி இருந்தாராம் கூத்தபிரான். எனக்கு இந்த நாடகத்துல என்ன வேஷம்னு சோ கேட்க, கூத்தபிரான் உனக்கு எந்த வேஷமும் இல்லன்னு பதில் சொன்னாராம்.
என்னது…. எனக்கு… நாடகம்…. கிடையாதா…? எனக்கு மட்டும் இந்த நாடகத்துல எந்த வேஷமும் இல்லன்னா நாடகம் நடக்கும்போது நான் குறுக்கே நெடுக்க போய் வந்துக்கிட்டே இருப்பேன்னு சொன்னார். கூத்தபிரானுக்கோ அதிர்ச்சி. சோவைப் பொருத்த வரை சொன்னபடி செய்து விடுவாராம். இது அவரது தம்பிகளுக்கே தெரியும். அதனால் அவர்களே அப்போது தலையைக் குனிந்து கொண்டனராம்.
இதைப் பார்த்த கூத்தபிரான் சரி சரி. உனக்கு எத்தனை காட்சிகள் வேணும்னு கேட்க, 3 காட்சிகள்னு சோ சொன்னாராம். அதன் பிறகு 5 காட்சிகள் வருமாறு கூத்தபிரான் எழுதியதும் தான் அந்த நாடகமே நடைபெற்றது. அதில் சோ என்ற பெயரில் நடித்ததால் அதுவரை இருந்த ராமசாமி சோ ஆனார். அந்தப் பேர் தான் அவருக்கு பின்னர் நிலைத்தது.