இமேஜ் பற்றி கவலைப்படாத நடிகர் திலகம்... கிண்டல் செய்த 'சோ'வையே நடிப்பால் அதிர வைத்த சிவாஜி..
தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான்கள் ஏராளமான ரசிகர்களைத் தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டனர். இருவரும் சினிமா உலகில் போட்டி போட்டுக் கொண்டு படங்களில் நடித்தனர்.
இவர்களில் எம்ஜிஆர் திரை உலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் சாதனை படைத்தார். சிவாஜி அரசியலுக்கு வந்தாலும் நிலைத்து நிற்க முடியவில்லை. சினிமாவில் தான் நடிப்பின் உச்சிக்கே சென்று விட்டார்.
ஹீரோக்களைப் பொருத்தவரை பெண்களையும், ஏழைகளையும் மதிப்பவர்களாக இருப்பார்கள். அதனால் தான் எல்லோருக்கும் அவர்களைப் பிடிக்கிறது. இந்த இமேஜை உடைத்தவர்கள் ஒரு சிலர் தான். எம்.ஆர்.ராதா, சத்யராஜ் என ஒரு சிலரை மட்டும் சொல்லலாம்.
இவர்கள் தங்களது தனித்திறமையால் மட்டுமே ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தனர். கமல் நடித்த காக்கி சட்டை படம் செகண்ட் ரிலீஸ் ஆனது. அந்த சமயத்தில் திரையரங்கில் சத்யராஜின் பெயர் டைட்டிலில் போட்ட போது கமலுக்கு நிகராக கைதட்டல் அவருக்கும் விழுந்தது.
குணாதிசயங்களிலும்இ வீர தீர செயல்களிலும் ஹீரோக்கள் ஒரு படி மேலாகப் போய் உயர்ந்து நிற்பதால் வில்லன்களை விட நமக்கு அவர்களைத் தான் பிடிக்கிறது. இது இந்தக்காலத்திலும் இப்படித்தான் நடக்கிறது. நிழல் எது நிஜம் எது என்று ரசிகர்கள் உணரவில்லை.
சிவாஜி இமேஜ் பற்றி கவலைப்படவில்லை. அதே நேரத்தில் ஒரு ஹீரோவின் நிழல் சமுதாயத்திற்கு ஒத்துழைக்கிறது என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். அவரது வாழ்க்கைப் பயணத்தை என் சரிதை என்ற நூலில் விவரிக்கிறார். அதில், நிஜ வாழ்க்கையில் நடிகர்களுக்க பல கெட்ட வழக்கங்கள் இருக்கின்றன.
இருந்தாலும், படங்களில் நல்லவன் போல் காட்டிக் கொண்டு, அரசியலில் நுழைந்து, மக்களுடைய மனதில் இடம்பிடிக்க வேண்டிய தத்துவம் எனக்கு அப்போது தெரியாது. என்னைப் பொறுத்தவரை வில்லனா, ஹீரோவா என்பது முக்கியமல்ல. நான் நடிகன் என்பது தான் முக்கியம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
சிவாஜி 1952ல் வெளியான பராசக்தியில் தான் அறிமுகமானார். அந்தப்படத்தில் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனால் அவர் தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பேன் என அடம்பிடித்து இருக்கலாம். ஆனால் அவர் அப்படியல்ல. அடுத்த ஆண்டிலேயே திரும்பிப் பார் என்ற படத்தில் நெகடிவ் ரோலில் நடித்தார். இதே போல் 1954ல் அந்த நாள் படத்தில் தேசத்துரோகி போன்ற கேரக்டரில் நடித்தார். ஆனால் இதே ஆண்டில் தான் மனோகரா படத்திலும் நடித்தார்.
ஹீரோவாக நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றி பெறுகின்றன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெறுகின்றன. அதனால் தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்போம் என்றும் அவர் திட்டம் போடவில்லை. ஒரு படத்தின் தான் நடிக்கும் கேரக்டரின் முக்கியத்துவத்தை மட்டுமே பார்க்கிறார்.
இது ஆரம்பகாலத்தில் மட்டும் நடக்கவில்லை. எம்ஜிஆருக்கு இணையாக வளர்ந்த போதும் பெண் பித்தனாக, குடிகாரனாக, கோமாளியாக, வயதானவராக என்று நடித்தார். 1966ல் வெளியான மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் 13 பிள்ளைகளின் தகப்பனாக நடித்தார். அப்போது அவருக்கு வயது 38 தான். நீங்கள் ஓவர் ஆக்டிங் பண்ணுவதாக சொல்கிறார்களே என சிவாஜியிடம் கேட்டால் இப்படி சொல்கிறார். டிக்சனரியை எடுத்துப் பாருங்கள். நடிப்பே ஒரு தோரணை தான். ஆக்டர் இஸ் எ டிராமாட்டிக் பர்பார்மர் என போட்டிருக்கும். நேச்சுரலாக எப்படி நடிக்க முடியும்? முகத்தில் அரிதாரம் பூசினாலே அது அன்நேச்சுரல் தானே.
கட்டபொம்மனை எடுத்துக் கொள்ளுங்கள். கிஸ்தி, வரி, வட்டி என்று தோரணையாகப் பேசினால் தானே அது வசனம். நாடகம்... என்றாராம். நடிகர் சோ ஒருமுறை சோவும், சிவாஜியும் இணைந்து நடித்த ஒரு படத்தில் சிவாஜி நடித்த பின் எல்லோரும் கைதட்டினார்கள். ஆனால் சோ மட்டும் அமைதியாக இருந்தாராம். இதைக் கவனித்த சிவாஜி, சோவை தனியறைக்கு அழைத்துச் சென்று நான் நடிச்சது பிடிக்கலையான்னு கேட்டாராம்.
அதற்கு அப்படி இல்லை. ரொம்ப ஓவரா இருந்ததுன்னு சொன்னாராம். சரி. அதே காட்சியை சாதாரணமா நடிக்கிறேன் என்று நடித்துக் காட்டினாராம் சிவாஜி. சோ மிரண்டு போனாராம். தூரத்தில் இருக்கும் ரசிகனுக்கு மிகைப்படுத்தி நடித்தால் தான் தன் நடிப்பு அவனுக்குப் புரியும் என்றாராம் சிவாஜி.