இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல! - டிவிட்டரில் நெகிழ்ந்த சூர்யா...
பலரிடம் பாராட்டை பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களால் ஜெய்பீம் திரைப்படம் அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. பாமக அன்புமணி எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யா பதில் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் தருகிறேன் என ஒரு மாவட்ட செயலாளர் பேட்டி கொடுத்தார். மேலும் சூர்யா ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என பாமக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனாலும்,ஜெய் பீம் படத்தை பார்த்த பொது ஜனங்கள், விமர்சகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் என பலரும் சூர்யாவை பாராட்டி வருகின்றனர். ஒருபக்கம், டிவிட்டரில் நெட்டிசன்கள் #WeStandwithSuriya என்கிற ஹேஷ்டேக்கையும் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு நன்றி கூறியுள்ள சூர்யா ‘ஜெய் பீம் படத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பு நெகிழ வைக்கிறது. இதை இதற்கு முன் நான் கண்டதில்லை. எங்கள் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கும், கொடுத்த தன்னம்பிக்கைக்கும் நன்றி கூற வார்த்தைகள் இல்லை. எங்கள் பக்கம் நின்றதற்கு இதயப்பூர்வமான நன்றிகள்’ என பதிவிட்டுள்ளார்.