இது கதை அல்ல நிஜம்...! ஒரு முன்னணி ஹீரோ காமெடி நாயகனான வரலாறு
சாந்தம் மிகுந்த வட்ட வடிவ முகம் கொண்டவர். அழகிய தோற்றம். பிரத்யேக குரல் வளம் உடையவர். 19ம் வயதிலேயே தமிழ் படங்களில் நடிக்கத் துவங்கி விட்டார். தெலுங்கு தான் இவரது தாய்மொழி என்றாலும் தமிழ்த்திரை உலகில் தனக்கென தனி இடம்பிடித்தார்.
அக்காலங்களில் ரஜினி, கமல் கோலூச்சிய காலகட்டம். அப்படி இருந்தும் சுதாகர் படங்கள் என்றால் தனி மவுசு தான். தமிழில் கதாநாயகனாக நடித்ததுமே வருடத்திற்கு 7 ல் இருந்து 12 படங்கள் வரை அசால்டாக நடித்தார் சுதாகர்.
இவர் கடந்து வந்த பாதையைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
கிழக்கே போகும் ரயில் பரஞ்சோதி, நிறம் மாறாதப் பூக்கள் சுதாகர், சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் மூர்த்தி ஆகிய இவரது கேரக்டர்களை இன்றும் மறக்க முடியாது. 1959ல் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மர்காபுரம் என்ற ஊரில் துணை ஆட்சியரின் மகன் தான் சுதாகர். இவருடன் 6 பேர் பிறந்தனர்.
வீட்டுக்கு இவர் செல்லப்பிள்ளை. பள்ளிப்படிப்பை முடித்ததும் ஆந்திராவின் கிறிஸ்டியன் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். இளம்வயதிலேயே கலையால் ஈர்க்கப்பட்டார். பள்ளி, கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்றார்.
சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புப் பயிற்சி பெற்றார். இவருடன் ஹாஸ்டலில் தங்கிப் படித்தவர் தான் தெலுங்கு பட உலக சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி. இதன் பேரில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும், ஹரிபிரசாத்தும் சுதாகருடன் ஒரே அறையில் தங்கி சமையல் செய்தும் நடிப்புப் பயிற்சி கற்றும் வந்தனர்.
திரைப்பட வாய்ப்புகளுக்காக சென்னை ஓட்டல் ஒன்றுக்குச் சென்றார் சுதாகர். அப்போது அங்கு வந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா சுதாகரின் அழகான அப்பாவியான தோற்றப்பொலிவைக் கண்டதும் தான் இயக்க உள்ள படத்திற்கு இவர் தான் கதாநாயகன் என தீர்மானித்தார். அதுதான் கிழக்கே போகும் ரெயில். 1978ல் இந்தப்படம் வெளியானது.
ராதிகா தான் ஜோடி. படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. பாடல்களும் தேனாக இனித்தன. இந்தப்படத்தில் பரஞ்சோதியாக வந்து அசத்தினார். ராதிகா பாஞ்சாலியாக நடித்து அறிமுகமானார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் இன்றும் நம்மை விட்டு நீங்க மறுக்கின்றன. கோவில் மணி ஓசை தனை, மாஞ்சோலை கிளிதானோ என்ற பாடலை இப்போதும் கேட்டாலும் அந்த இனிய தருணத்தை உணரலாம்.
முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப்படத்திற்கு தமிழை பிழையின்றி பேசக் கற்றுக்கொடுத்தது பாரதிராஜாவின் சீடர் பாக்யராஜ் தான். தொடர்ந்து இனிக்கும் இளமை என்ற படத்தில் நடித்தார்.
இதில் விஜயகாந்த் தான் வில்லன். இந்தப்படத்திலும் சுதாகர், ராதிகா கூட்டணி இணைந்தது. இந்த வெற்றிக்கூட்டணி 15 படங்களுக்கும் மேல் தொடர்ந்தது. இயக்குனர் காஜாவின் மாந்தோப்புக் கிளியே என்ற படத்தில் சுதாகர் தீபாவுடன் இணைந்து நடித்தார்.
இப்படத்தின் வெற்றிக்கு சுருளிராஜனின் காமெடி உறுதுணையாக இருந்தது. தொடர்ந்து பா.செல்வராஜின் இயக்கத்தில் பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்தில் நடித்தார் சுதாகர். இவருக்கு ஜோடி சரிதா. அடுத்து இவர் நடித்த சூப்பர்ஹிட் வெற்றிப்படம் தான் நிறம் மாறாத பூக்கள். பாரதிராஜா இயக்கினார். விஜயன், ராதிகா நடித்த இந்தப்படத்தில் சுதாகர் கதாபாத்திரத்திலேயே தோன்றினார்.
இருபறவைகள் மலை முழுவதும், முதன் முதலாகக் காதல் டூயட் ஆகிய பாடல்கள் இந்தப்படத்தில் தான் உள்ளன. பாக்யராஜின் இயக்கத்தில் சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் மூர்த்தி வேடத்தில் நடித்தார். காதல் வைபோகமே என்ற சூப்பர்ஹிட் பாடல் இந்தப்படத்தில் உள்ளது. சக்களத்தி படத்தில் வித்தியாசமான ஹீரோவாக தோன்றினார். கரும்புவில் படத்தில் நடித்தார்.
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் என்ற இனிய பாடல் இந்தப்படத்தில் உள்ளது. ஆயிரம் வாசல் இதயம், எதிர்வீட்டு ஜன்னல் ஆகிய படங்களில் சுதாகர் நடித்து அசத்தினார். பாரதிராஜா நடித்து இயக்கிய கல்லுக்குள் ஈரம் படத்தில் சுதாகர் நடித்தார். சிறுபொன்மணி என்ற ரம்மியமான பாடல் இந்தப்படத்தில் தான் உள்ளது. 1980ல் எங்க ஊர் ராசாத்தி படம் வெளியானது.
இதில் பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன் என்ற பாடலில் அசத்தினார் சுதாகர். மலர்களே மலருங்கள், ருசிகண்ட பூனை, ஒருத்தி மட்டும் கரையினிலே, குருவி கூடு, சின்ன சின்ன வீடு கட்டி, மாமியாரா மருமகளா என 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1980ல் பவித்ர பிரேமா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அங்கு தயாரிப்பளராகவும் இருந்து நடித்தார். நகைச்சுவை வேடத்திலும் நடித்து அசத்தினார். 1990ல் தெலுங்கில் இவர் காமெடி ஹீரோவானார். அதிசய பிறவியில் ஜெய்கணேஷின் மகனாக நகைச்சுவை வில்லனாக நடித்தார் சுதாகர்.
2018ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கணவராக நடித்தார். ஆந்திராவில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருதைப் பெற்றார். இவரது ஒரே மகன் பென்னி தற்போது எஞ்சினீயராக உள்ளார்.