விஜயகாந்த் செய்த மிகப்பெரிய சாதனை!. அவர் போல யாருமில்ல!.. உருகி பேசிய தியாகராஜன்…

சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்தவர் விஜயகாந்த். விஜயராஜ் என்கிற தனது பெயரை சினிமாவுக்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். விஜயகாந்த் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோது ரஜினி, கமல் ஆகியோர் பெரிய நடிகர்களாக இருந்தார்கள். எனவே, படாதபாடு பட்டுதான் வாய்ப்புகளை விஜயகாந்த் பெற்றார். வில்லனாக கூட நடிக்க துவங்கினார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறினார். அதன்பின் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் மாறினார்.

ஒருகட்டத்தில் ரஜினி,கமல் படங்களை விட விஜயகாந்தின் படங்கள் அதிக வசூலை பெற்று அவர்களின் போட்டி நடிகராகவும் மாறினார். தமிழ் நாட்டின் மூலை முடுக்கில், குக்கிராமங்களில் கூட விஜயகாந்துக்கு ரசிகர்கள் இருந்தார்கள். ரசிகர் மன்றங்களும் உருவானது. எல்லோருக்கும் பிடித்த நடிகராக விஜயகாந்த் இருந்தார். இவரின் பல படங்கள் வெள்ளிவிழா படங்களாக ஓடியது.
இந்நிலையில், விஜயகாந்த் ஹீரோவாக நடித்த போது பல திரைப்படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்தவரும், நடிகர் பிரசாந்தின் அப்பாவுமான தியாகராஜன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘1984ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த 18 படங்கள் வெளியானது. தமிழ் சினிமாவில் இது மிகப்பெரிய சாதனை. அவரை போல ஒரு நடிகரை பார்க்கவே முடியாது.

நான் அவருடன் ‘நல்ல நாள்’ என்கிற படத்தில் நடிக்கும்போது காலை 6 மணிக்கெல்லாம் ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவார். அவர் சாப்பிடுவரா? தூங்குவாரா? என்பது கூட தெரியவில்லை. சண்டை காட்சியில் நடிப்பது, குதிரை ஓட்டுவது, நடனம் ஆடுவது, நடிப்பது என எல்லாவற்றிலும் ஆக்டிவாக இருப்பார். அப்போதே அவரின் ஹேர்ஸ்டைல் ஹிந்தி நடிகர் போல இருக்கும். அவரோட கண்கள் வசீகரமாக இருக்கும். ஆண்மையை தூண்டும் விதமாகத்தான் அவரின் படங்கள் இருக்கும். அப்படிப்பட்ட கதைகளில்தான் அவர் நடித்தார்’ என தியாகராஜன் பேசியிருந்தார்.