காமெடி என்ன கல்வெட்டா!. அது ஃபீலிங்!.. ஷங்கருடன் வடிவேலு போட்ட சண்டை!.

தமிழ் சினிமாவில் தனது உடல் மொழியாலும் மதுரை பாஷையாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்தான் வடிவேலு. பல படங்களிலும் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். இவரின் காமெடிக்கு வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ரசிகர்களாக இருப்பதுதான் அவரின் அவரின் சிறப்பு.
துவக்கத்தில் கதைக்கு தொடர்பில்லாமல் தனி காமெடி டிராக் செய்து வந்த வடிவேலு ஒருகட்டத்தில் ஹீரோவோடு எப்போதும் வலம் வரும் நண்பனாக நடிக்க துவங்கினார். சரத்குமார், சத்தியராஜ், பிரபு என பலருடனும் அப்படி நடித்திருக்கிறார். விஜய் - சூர்யா இணைந்து நடித்து உருவான ஃபிரண்ட்ஸ் படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி வேடத்தில் அவர் செய்த காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
கிரி, வின்னர், தலைநகரம் உள்ளிட்ட பல படங்களின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடி ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இந்த படங்களின் காமெடி இப்போதும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சிரிக்க வைக்கும் வடிவேலுவுக்குள் ஒரு சீரியஸான குணம் உண்டு. தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்ய இயக்குனர் அனுமதிக்க வேண்டும் என நினைப்பார். இல்லையெனில் அந்த படத்தில் நடிக்கமாட்டார்.

தனுஷின் படிக்காதவன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் வடிவேலுதான். ஆனால், இயக்குனர் சொன்னதை விட்டு வேறு மாதிரி வடிவேல் செய்ததில் கடுப்பான தனுஷ் ‘டைரக்டர் சொல்ற மாதிரி நடிங்கண்ணே’ என சொன்னதால் அந்த படத்திலிருந்து வெளியேறினார். அதன்பின் அத படத்தில் விவேக் நடித்து படம் வெளியானது.
மேலும், இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடித்தபோது படப்பிடிப்பில் அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட படத்திலிருந்து வெளியேறினார். இதனால் தனக்கு சில கோடிகள் நஷ்டம் என சொல்லி தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் புகார் கொடுக்க 4 வருடங்கள் வடிவேலு நடிக்கவில்லை.
அதன்பின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அவர் ஹீரோவாக நடித்த அந்த படம் ஓடவில்லை. இப்போது மீண்டும் காமெடி நடிகராக நடிக்க துவங்கிவிட்டார். சுந்தர்.சியுடன் வடிவேலு நடித்துள்ள கேங்கர்ஸ் படம் வெளியாகவுள்ளதால் இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் வடிவேலுவும், சுந்தர் சியும் கலந்துகொண்டு வருகிறார்கள்.
அப்போது பேசிய வடிவேலு ‘நான் ஒரு பெரிய இயக்குனர் படத்தில் நடித்தேன். நான் சொன்ன காமெடிகளை கேட்டு சிரித்துக்கொண்டே இருந்தார். அதன்பின் ‘பேப்பரில் என்ன டைப் செஞ்சிருக்காங்களோ அத மட்டும் பேசி நடிங்க’ என சொன்னார். காமெடி என்பது கள்வெட்டு இல்லை. அது உள்ள இருந்து வரணும். நடிக்கும்போது நமக்கு நிறைய வரும். ஆனா இயக்குனர் பிடிவாதமாக இருந்தார். அதனால்தான் அந்த படத்தில் இருந்து வெளியேறினேன். அவரால்தான் 4 வருடங்கள் நான் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். அது யார் என உங்களுக்கே தெரியும்’ என கூறினார். அவர் பெயரை சொல்லவில்லை என்றாலும் அது ஷங்கர்தான் என சுலபமாக புரிந்துகொள்ளலாம்.