தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘அன்பும் கருணையும்தான் நம் வாழ்வின் அடிப்படை.. தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லா மதத்தை சார்ந்தவர்களும் நண்பர்களாக பாகுபாடின்றி இருக்கிறார்கள்.
இது ஒரு தாய் மண்.. ஒரு தாய்க்கு எல்லா குழந்தையும் ஒன்றுதானே.. இந்த விழாவில் நான் ஒரு உறுதியளிக்கிறேன்.. தமிழக வெற்றிக்கழகம் 100 சதவீதம் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும். அதில் எந்த சமரசமும் இல்லை’ என்று பேசினார்.
மேலும் ‘பைபிளில் நிறைய கதைகள் இருக்கிறது.. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு இளைஞனை அவரின் உடன் பிறந்த சகோதரகளே துரோகத்தால் வீழ்த்தி அதன்பின் அவர் அதிலிருந்து மீண்டு அவரின் சகோதரர்களை மட்டுமல்ல.. நாட்டையும் காப்பாற்றி வழி நடத்தினார்’ என்று சொல்லி அவர் இடைவெளி விட கூட்டத்திலிருந்தவர்கள் ஆர்ப்பரித்தார்கள்.
அதன்பின் ‘ இந்த கதையை நான் யாரை மனதில் சொல்கிறேன் என்று நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை’ என்று சொல்ல கைத்தட்டல் பறந்தது. அதாவது என்னை துரோகத்தால் பல சூழ்ச்சிகளில் செய்தாலும் நான் மீண்டு வந்து நாட்டை ஆள்வேன் என்று விஜய் சொல்வதற்காகவே அவர் இந்த குட்டி கதையை சொல்லியதாக பார்க்கப்படுகிறது.
