போலீசுல புடிச்சு குடுத்துடுவேன்!...விஜய் வெளியிட்ட அறிக்கை...கேட்பார்களா ரசிகர்கள்?...
தமிழ் சினிமாவில் இரண்டு குறிப்பிட்ட நடிகர்களுக்குள் போட்டி என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. ரஜினி- கமல், தனுஷ் - விஜய், அஜித் - விஜய் ஆகியோரிடையே மறைமுகமாக போட்டி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அதிலும், விஜய் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் மிகவும் கடுமையாகவும், கொச்சையாகவும் விமர்சித்து கொள்கிறார்கள். மேலும், விஜய் ரசிகர்கள் அஜித்தையும், அஜித் ரசிகர்கள் விஜயையும் மிகவும் ஆபாசமாக சித்தரித்து மீம்ஸ்களை உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர். இது பல வருடங்களாக நடந்து வருகிறது.
ஒருவரை பாராட்டுவதற்காக மற்றொருவரை இழிவுபடுத்தி பேச வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டார். ஆனால், அவரின் ரசிகர்கள் அதை பின்பற்றவில்லை.
இந்நிலையில், விஜய் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் ‘அரசு பதவிகளில் உள்ளோர், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்க கூடாது. மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனம் செய்யக்கூடாது. பத்திரிக்கை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதிவிடமோ, மீம்ஸ் போடவோ கூடாது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயின் உத்தரவின் படி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விஜய் சொல்வதை அவரின் ரசிகர்கள் கடைபிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...