சின்னக்கலைவாணரின் சிந்தனையில் உதித்த நகைச்சுவை பஞ்ச்கள் - ஒரு பார்வை
ரசிகர்களால் அன்புடன் இவர் சின்னக்கலைவாணர் என அழைக்கப்பட்டார். அதற்குக் காரணம் என்னவென்று இந்தக் கட்டுரையின் முடிவில் பார்க்கலாம். இப்போது அந்த அற்புதமான நடிகர் விவேக் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
மரம் நடுதல், மக்கள் தொகைப் பெருக்கம், ஆண் உறை அணிதலின் அவசியம், மூட நம்பிக்கை, அரசியல் என இவர் பலதுறைகளையும் பற்றி நகைச்சுவையாய் பல கருத்துகளை மக்கள் மத்தியில் விதைத்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில சுவையான சம்பவங்கள் மற்றும் சினிமாக்களைப் பற்றிப் பார்க்கலாம்.
சினிமா சூட்டிங்கின் போது ரசிகர் ஒருவர் கூட்டத்தில் நின்று நீங்க எங்க வீட்டுக்குக் காபி சாப்பிட வரணும் என்றார். அவ்வளவு தானே வந்தா போச்சு என்ற விவேக் அடுத்த தெருவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றார். கூப்பிட்ட ரசிகருக்கோ குப்பென்று வியர்த்துவிட்டது.
நல்ல சேர் கூட அவர் வீட்டில் இல்லை. தகர டின்னில் தான் உட்கார வேண்டும். அங்கு அமர்ந்து விவேக் காபி சாப்பிட்டார். அவர் பஜ்ஜி போட்டு கடை கடையாக விற்பவர். விவேக் 2 பஜ்ஜியும் சாப்பிட்டு விட்டு ரசிகருடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
சாமானியனும் திறமை இருந்தால் சினிமா உலகில் கோலோச்சலாம் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் தான் நடிகர் விவேக்.
மதுரை அமெரிக்கன் காலேஜில் இவர் படிக்கும்போது அடிக்காத அங்கு கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது. ஆங்கிலம் படித்தார். மதுரை மக்களுக்கே உரிய லந்து, டைமிங் சென்ஸ் என்று இவர் செம கலாய் கலாய்ப்பார்.
கே.பாலசந்தரின் அரவணைப்பில் இருந்து வெளிப்பட்ட கலைஞன் என்பதால் தமிழ்த்திரை உலகம் இவரை வாரி அணைத்துக் கொண்டது. 1989ல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் சொல்லும் டயலாக்கை இப்போது பார்த்தாலும் குபீர் என்று சிரிப்பு வந்து விடும்.
அதுதான் "இன்னைக்கு செத்தா நாளைக்குப் பாலு...!" உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்த இந்த வசனம் அவர் பேசும் சூழ்நிலையில் சிரிப்பை வரவழைத்துவிடும். சிரிப்புடன் சிந்தiனையையும் இணைத்துக் கலந்து பக்குவமாக மக்களுக்கு எடுத்துக் கூறிய என்எஸ்கேவை மக்கள் கலைவாணர் என்று அழைத்தனர்.
அவர் வழி வந்து காமெடியில் கொடி கட்டிப் பறந்ததால் மக்கள் இவரை சின்னக் கலைவாணர் என்றே செல்லமாக அழைத்தனர். இவரது காமெடியை சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்டலக்சுவல் காமெடி என்று சொல்லலாம்.
அதாவது இவர் பேசும்போது நமக்கு டக்கென்று சிரிப்பு வந்துவிடாது. அடுத்த சில நிமிடங்களில் அவர் என்ன சொன்னார் என்று சிந்தித்துப் பார்த்து அடடே...என்று ரசித்து சிரிப்போம். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான காமெடியைத் தனக்கென தனி பாணியாக உருவாக்கிக் கொண்டு கவுண்டமணியும், செந்திலும் கொடி கட்டிப் பறந்த காலத்திலும் விவேக் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் என்பதை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து பழகி அவரது அறிவுரைப்படி மரம் நட ஆரம்பித்தார். அதைத் தீவிர இயக்கமாகவும் நடத்தினார். இவரது உந்துதலால் தான் சாலமன் பாப்பையா, பரவை முனியம்மா, பட்டிமன்றம் ராஜா ஆகியோர் தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைத்தனர்.
பொதுவாக நகைச்சுவைக் கலைஞர்கள் நம்மை சிரிக்க வைக்கிறார்கள் என்று தான் நினைப்போம். உண்மையில் அவர்கள் அதைத் தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். தனக்குள் இருக்கும் சோகத்தை மறைத்துக் கொண்டு நமக்கு சிரிப்பைப் பரிசாகத் தருகிறார்கள்.
டெங்கு காய்ச்சலின் போது தனது மகனை இழந்து தவித்தவர். எப்படி இருந்த நான்...இப்படி ஆயிட்டேன் என்று இவர் சொன்ன காமெடி பஞ்ச், அவரிடத்திலும் அது நிஜமானது.
இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் என்ற இவரது பஞ்ச் நகைச்சுவை அப்போது ட்ரெண்டாக இருந்தது.
இந்த அற்புதக் கலைஞர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரது அருமையான மரம் நடும் இயக்கத்தை நாமும் பின்பற்றி நம்மால் முடிந்த அளவுக்கு மரங்களை நட வேண்டும் என்பதே நாம் அவருக்குக் கொடுக்கும் உண்மையான மரியாதை.