விஜய்க்கு வாழ்க்கை கொடுத்த விவேக்!.. அந்த படத்துல அவர் மட்டும் இல்லன்னா!..
சில நடிகர்கள் கஷ்டப்பட்டு மேலே வருவார்கள். தொடர் வெற்றிப்படங்களை கொடுப்பார்கள். முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மாறுவார்கள். அவர்களின் படங்கள் நல்ல வசூலை பெறும். அவர்களுக்கென ரசிகர் கூட்டமும் உருவாகும். சினிமாவை பொறுத்தவரை எவ்வளவு பெரிய நடிகரென்றாலும் தொடர் தோல்வி கொடுத்தால் அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர் தயங்குவார்கள். அதை தவறு எனவும் எனவும் சொல்ல முடியாது. ஏனெனில் சினிமா என்பது வியாபாரம். இவ்வளவு போட்டு இவ்வளவு எடுக்க வேண்டும் என்கிற கணக்கு.
நடிகர் அஜித் கூட அவரின் கேரியரில் பல தோல்விப்படங்களை கொடுத்துள்ளார். அவர் தொடர்ந்து நடித்த பல படங்கள் வெற்றியை பெறவில்லை. அதன்பின் பில்லா படத்தின் வெற்றிதான் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது. அதேபோல், நடிகர் விஜயும் ஒரு கட்டத்தில் தொடர் தோல்விப்படங்களை கொடுத்தார்.
ஷாஜகான், பகவதி, வசீகரா, புதிய கீதை என தொடர் தோல்விகளை கொடுத்து அப்செட்டில் இருந்தார். அப்போதுதான் ரமணா இயக்கத்தில் திருமலை படத்தில் நடித்தார். இந்த படம் 2003ம் வருடம் வெளியானது. விஜய்க்கு தொடர் தோல்வி என்பதால் இப்படத்தை படக்குழு இயக்குனர் பாலச்சந்தரிடம் போட்டு காட்டி அவரிடம் கருத்து கேட்டது.
‘படம் ஓகே. ஆனால், காமெடியே இல்லை. விவேக்கை வைத்து சில காமெடி காட்சிகளை எடுத்து படத்தில் சேர்த்துவிடுங்கள். படம் ஹிட்டாகும்’ என அவர் சொல்ல ரமணாவும் அப்படியே செய்தார். படமும் வெளியாகி விஜய்க்கு ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தின் காமெடியும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதன்பின் கில்லி, திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களில் நடித்து விஜய் மீண்டும் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். அதேபோல் விஜயுடன் குஷி, உதயா, ஆதி, பிகில் உள்ளிட்ட பல படங்களிலும் விவேக் நடித்துள்ளார்.
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது தனி நபரை மட்டுமே சார்ந்தது இல்லை. அது ஒரு கூட்டு முயற்சி என்பதற்கு ‘திருமலை’ படமே ஒரு பெரிய உதாரணம் ஆகும்.