சுவாமி விவேகானந்தரைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய விவேக்! என்ன ஒரு அற்புதம்...!
ஸ்ரீலங்கா மட்டக்கிளப்புவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விவேக் இவ்வாறு பேசினார். மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விவேகானந்தரது உரை பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1897ல் விவேகானந்தர் சொன்னது இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியா விடுதலை அடையும் என்றார். இந்தியா அப்போது சரியாக (1897+50=1947)சுதந்திரம் அடைந்தது. சென்னை மெரீனா பீச்சிலே சுவாமி விவேகானந்தர் சொன்னது என்ன தெரியுமா? இங்கிருந்து 100 இளைஞர்களைக் கொடுங்கள். நான் இந்தத் தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன். சென்னையில் இருந்து புது புரட்சி ஆரம்பிக்கிறது.
அதே சென்னையில் விவேகானந்தர் சிலைக்கு முன்பாக ரொம்ப நாள் முடியாம இருந்து நீதிமன்றங்கள்ல நிலுவையில் இருந்து பல அரசியல் கட்சிகளால் முடியாமல் இருந்த அந்த ஜல்லிக்கட்டை கிட்டத்தட்ட 8 லட்சம் மாணவர்கள் ஒன்றுகூடி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைக் கொண்டு வந்தார்கள். அந்த ஆன்மிக சக்தி யாருடையது என்றால் சுவாமி விவேகானந்தரின் சக்தி.
பொதுவாக ஆன்மிகத்துல துறவிகள், சாமியார்லாம் எப்படி இருப்பாங்கன்னா காவி வேட்டி உடுத்திருப்பாங்க..அமைதியா இருப்பாங்க. காட்டுக்குள்ள இருப்பாங்க. தவத்துல இருப்பாங்க. இப்படித் தான் கேள்விப்பட்டுருக்கோம். ஆனா முதல்முறையாக அந்த இலக்கணத்தை உடைச்சவர் யாருன்னா அது சுவாமி விவேகானந்தர் தான். 6 அடி உயரம். ஆஜானுபாகுவான தோற்றம். கால்பந்து வீரர். கண்களில் கருணை. அதே நேரத்தில் நேர்மை. அதே நேரத்தில் உண்மை.
அதே நேரத்தில் ஆண்மை. இது அவ்வளவும் கலந்த காம்பினேஷன் காம்போ தான் சுவாமி விவேகானந்தர். இந்து மதத் துறவியாக அவர் அறியப்பட்டாலும் அனைத்து மதங்களையும் அரவணைத்துச் சென்றவர் சுவாமி விவேகானந்தர். எதுக்காக சொல்றேனா யாராவது இதைச் சொல்வாங்களான்னு யோசிச்சிப் பாருங்க. நான் மட்டும் இயேசுகிறிஸ்து பிறந்த ஜெருசலேத்தில் பிறந்திருந்தால்...இயேசுகிறிஸ்துவின் பாதங்களை என் இருதயத்தின் இரத்தத்தால் கழுவுவேன் என்று சொன்னார்.
இதைச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர். இஸ்லாத்தையும் அரவணைத்தவர். அவர் சொல்கிறார். ஏ...இந்திய இளைஞனே...உனக்கு இஸ்லாம் இளைஞனனைப் போன்ற உடற்கட்டும், வேதங்கள் படிக்கின்ற மூளையும் உனக்குத் தேவை என்று இரண்டு மதங்களையும் ஒன்றாக இணைத்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் தான் முதன் முதலாக சொன்னார்.
நீ கீதையைப் படிப்பதைக் காட்டிலும் கால் பந்தை விளையாடு. அதில் சொர்க்கத்தை மிக அருகில் காணலாம் என்று சொன்னவர் சுவாமி விவேகானந்தர். நான் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்தவன். அவர்களுக்கே உண்டான பொருளாதார பிரச்சனை, உடல் ஆரோக்கியம், கடன் பிரச்சனை என எல்லாவற்றையும் கடந்து வந்தவன் தான் இந்த விவேகானந்தர்.
உங்கள் கண்கள் சிரித்துக் கொண்டு இருந்தாலும் உங்கள் கன்னத்தில் இன்னும் கண்ணீரின் வடு மாறாமல் தான் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் எங்கிருந்தோ உங்களுக்கு வீரம், உற்சாகம் வந்து விடும். சுருக்கமாகச் சொல்வதென்றால் பொன்மொழிகளைப் படித்தால் ஒரு புழு கூட புலியாக மாறி நிற்கும். அதுதான் சுவாமி விவேகானந்தர்.