வாய்ப்புக்காக பிச்சை எடுக்கிறேன்!.. ராட்சசன் பட நடிகருக்கு இந்த நிலமையா?....
சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடித்து குறிப்பாக தொடர்ந்து நடித்து பணம் ,புகழ் என அனைத்தையும் பெறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் சென்னைக்கு வந்து பலரும் பல வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
சிலருக்கு சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைக்கும். அதோடு நின்றுவிடும். சிலருக்கு வாய்ப்புகளே கிடைக்காது. ஆனாலும் நம்பிக்கையுடன் அவர்கள் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் யாசர்.
ராட்சசன் படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் கிறிஸ்டோபராக நடித்திருப்பார். ஆனால், மேக்கப் போட்டுவிட்டதால் இவரின் முகமும் ரசிகர்களுக்கு தெரியாது. ஆனாலும், கிடைத்த வாய்ப்பு இது என அவர் ஆர்வமாக நடித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டியளித்த யாசர் ‘15 வருடங்களாக போராடுகிறேன். சினிமாவில் மட்டும் 8 வருடங்களாக முயற்சி செய்து வருகிறேன். தொடக்கத்தில் மைடியர் பூதம் என சீரியலில் நடித்தேன். அதன்பின் சீரியலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தேன்.
பின்னரே சினிமாவில் நடிக்க முயற்சி செய்தேன். பல போராட்டங்களுக்கு பின் ராட்சசனில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அதிலும் என் முகம் தெரியாது. எனவே, அப்படத்திற்கு பின் வாய்ப்புகள் வரவில்லை. பசி, வறுமை, அவமானம் இதுதான் கிடைத்தது’ என அவர் பேட்டியளித்துள்ளார்.