அந்த மாதிரியெல்லாம் நடிக்க மாட்டோம்!. நடிக்க மறுத்த பெரிய நடிகர்கள்!.. இவ்வளவு நடந்திருக்கா?!..
தமிழ்த்திரை உலகில் பல்வேறு அதிசயங்கள் நடந்துள்ளன. சில படங்களில் நடிகர்கள் இயக்குனர்களிடையே கருத்துவேறுபாடு வந்து படம் பாதியிலேயே நின்று போகும். சில படங்களில் நடிகர்களின் தலையீடு காரணமாக இயக்குனர்கள் செய்வதறியாது விழிப்பார்கள்.
கடைசியில் படம் பிளாப் ஆகும். இயக்குனர்கள் சொல்வது போல சில நடிகர், நடிகைகள் நடிக்க மறுப்பார்கள். அது ஏன்? என்னென்ன படங்கள், யார் யார் அப்படி நடித்துள்ளார்கள் என்று பார்ப்போமா...
எம்ஜிஆர் நடித்த மாபெரும் வெற்றிப்படம் மதுரை வீரன். இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் எம்ஜிஆர் இறந்து போவது போல காட்சிகள் இருக்கும். அதிலும் எம்ஜிஆர் இறந்ததை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் தெய்வமாக விண்ணுலகம் செல்வது போல காட்சி வரும்.
அந்தக் காட்சியில் எம்ஜிஆர் நடிக்க மறுத்து விட்டாராம். ஏன்னா அப்போது திமுக கட்சியில் எம்ஜிஆர் இருந்தாராம். தான் பகுத்தறிவு சார்ந்த கொள்கை உடையவன். அதனால் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதன்பிறகு டூப் போட்டு தான் அந்தக் காட்சியை எடுத்தார்களாம்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த சூப்பர்ஹிட் படம் பாகப்பிரிவினை. இந்தப்படத்தில் சரோஜாதேவி ஒரு காட்சியில் எம்ஆர்.ராதாவை துடைப்பத்தால் அடிக்க வேண்டுமாம். ஆனால் அதற்கு சரோஜாதேவி மறுத்து விட்டாராம்.
ஏன்னா அவர் மேல் மதிப்பும், மரியாதையும் உண்டு. அதனால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதன்பிறகு எம்ஆர்.ராதாவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தாராம். முடியவே முடியாது என்று சொல்லிவிட்டாராம் சரோஜாதேவி. அப்புறம் இயக்குனர் பீம்சிங், எம்ஆர் ராதாவை துடைப்பத்தால் அடிப்பது போன்று காட்சியை மாற்றி அமைத்தாராம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் முத்து. இந்தப்படத்தில் சரத்பாபு ரஜினியை கன்னத்தில் அறைவது போன்று ஒரு காட்சி. முதலில் சரத்பாபு வேடத்தில் அரவிந்த்சாமி தான் நடிப்பதாக இருந்ததாம். அதன்பிறகு ஜெயராம் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் இருவருமே ரஜினியின் ரசிகர்கள் என்பதால் அந்தக்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார்களாம். கடைசியில் ரஜினியே சரத்பாபுவிடம் பேசி நடிக்க வைத்தாராம்.