பிடிவாதத்தால் மண்ணை கவ்விய டாப் நடிகர்கள்… வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு சும்மாவா சொன்னாங்க!!
தமிழ் சினிமாவால் வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. ஒரு காலத்தில் டாப் நடிகர்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்கள் பின்னாளில் சுவடு கூட தெரியாமல் மறைந்துப்போயிருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் புகழ் உச்சிக்கு ஏறிய பின் வெத்து பிடிவாதத்தால் மண்ணை கவ்விய நடிகர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்ட சில நடிகர்களை குறித்து இப்போது பார்க்கலாம்.
சந்திரபாபு
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த சந்திரபாபு, ஒரு சிறந்த பாடகரும் கூட. மேலும் நன்றாக நடனமும் ஆடுவார். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய ஜாம்பவான்கள் கொடி கட்டி பறந்த காலகட்டத்தில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை அமைத்துக்கொண்டவர்தான் சந்திரபாபு.
எனினும் ஒரு காலகட்டத்தில் சந்திரபாபு பல தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக இருந்தாராம். படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது, பேசிய சம்பளத்தை விட அதிகமாக கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டாராம். மேலும் கூடுதலாக சொந்த படத்தை தயாரிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தாராம். இது போன்றவற்றால் சந்திரபாபுவின் மார்க்கெட் சற்று சரிந்ததாம்.
மோகன்
ரசிகர்களால் “மைக்” மோகன் என செல்லமாக அழைக்கப்பட்ட மோகன், “பயணங்கள் முடிவதில்லை”, “கோபுரங்கள் சாய்வதில்லை”, “மௌன ராகம்”, போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர். மோகனின் வசீகர தோற்றம் அக்காலத்து இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்தது என்றுதான் சொல்லவேண்டும்.
குறிப்பாக இளையராஜாவின் இசை, மோகன் திரைப்படங்களின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது. மோகன் தன்னுடைய திரைப்படங்களுக்கு சொந்த குரலில் பேசியது இல்லை. அவருக்கு பின்னணி குரலாக அமைந்தவர் சுரேந்தர் என்ற பாடகர். இந்த நிலையில் ஒரு நாள் சுரேந்தர், “மோகனுக்கு நான்தான் பின்னணி குரலாக திகழ்கிறேன்” என வெளிப்படையாக கூறிவிட்டாராம். இதனால் மோகன் “சுரேந்தர் பேசுவதால்தான் என் படம் ஓடுகிறதா என்ன?” என்று தனது சொந்த குரலில் பேச ஆரம்பித்தாராம். அதன் பிறகுதான் மோகன் சரிவை கண்டாராம்.
கார்த்திக்
1980களில் நவரச நாயகனாகவும் இளம்பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் கார்த்திக். அவரது பாடி லேங்குவேஜ்ஜும் அவர் வசனங்கள் பேசும் பாணியும் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.
எனினும் கார்த்திக் மீது பல புகார்கள் அக்காலத்தில் எழுந்தனவாம். அவர் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வரமாட்டாராம். மது அருந்துவிட்டு அவரது அறையிலேயே தூங்கி விடுவாராம். கதவை தட்டினாலும் திறக்க மாட்டாராம். இவ்வாறான போக்கு அவரது மார்க்கெட்டை சரித்துவிட்டதாம்.
வடிவேலு
தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை விட்டு என்றும் நீங்காத நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு திமுகவுக்கு ஆதரவாகவும் விஜயகாந்த்தை மிக மோசமாகவும் திட்டி பிரச்சாரம் செய்து வந்தார். அந்த ஆண்டு தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் தயாரித்த “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்திற்கு சரியாக ஒத்துழைப்பு தராத காரணத்தாலும் அதனால் ஷங்கருக்கு ஏற்பட்ட இழப்புகள் காரணமாகவும் வடிவேலு சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது. எனினும் சென்ற ஆண்டு ரெட் கார்டு விலக்கப்பட்டதை தொடர்ந்து “நாய் சேகர்” திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.