என்னை காதலித்தாரா ராமராஜன்?? ரொம்ப கஷ்டமா இருந்தது… சீரியல் நடிகையின் வாழ்க்கையில் நடந்த சோகம்..
பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அபிதா. அத்திரைப்படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாப்பாத்திரத்தின் பெயரிலேயே பிரபலமான அவர், தமிழில் “எட்டுப்பட்டி ராசா” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் “கோல்மால்”, மலையாளத்தில் “மஸ்மாரம்” போன்ற திரைப்படங்களில் நடித்த அபிதா, விக்ரமுடன் “சேது” திரைப்படத்தில் நடித்தார்.
“சேது” திரைப்படத்தின் மூலம் அவர் பரவலாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து “பூவே பெண் பூவே”, “அரசாட்சி”, “உணர்ச்சிகள்” என பல திரைப்படங்களில் நடித்த அவர் 2007 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “திருமதி செல்வம்” என்ற தொடரில் அர்ச்சனா என்ற கதாப்பாத்திரம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்தார். அக்கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். இதன் மூலம் அவர் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
இதனிடையே கடந்த 2001 ஆம் ஆண்டு அபிதா நடித்த திரைப்படம்தான் “சீறிவரும் காளை”. இத்திரைப்படத்தில் அபிதா ராமராஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில்தான் ராமராஜனுக்கும் நளினிக்கும் விவாகரத்து நடந்திருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அபிதா “நான் ராமராஜனுடன் ஒரு திரைப்படத்தில் நடித்தேன். அந்த வேளையில் தான் அவருக்கும் நளினிக்கும் விவாகரத்து நடந்தது. அப்போது எனக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் என்னால்தான் அவரது மனைவியை அவர் பிரிந்தார் எனவும் வதந்தி பரவ தொடங்கியது.
ஆனால் நளினி அவர்களை நான் பார்த்தது கூட கிடையாது. படப்பிடிப்பு தளத்திற்கு கூட அவர் வந்தது கிடையாது. நான் ராமராஜனிடம் அவ்வளவாக பேசியது கூட கிடையாது. ஆனால் எங்கு திரும்பினாலும் என்னால்தான் அவருக்கு விவாகரத்து ஆனதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. மேலும் ராமராஜன் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரவின. எனக்கு மிகவும் மென்ட்டல் டார்ச்சர் போல் ஆகிவிட்டது.” என மிகவும் கவலையோடு பகிர்ந்துள்ளார். எனினும் “திருமதி செல்வம்” என்ற தொடரின் மூலம் குடும்பப் பெண்களின் மனதில் விருப்பத்திற்குரிய நடிகையாக இப்போதும் திகழ்ந்து வருகிறார் அபிதா.