Ajithkumar: நடிகர்களில் அஜித் வேறுபட்டவர். பொதுவாக பெரும்பாலான நடிகர்கள் தங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்க வேண்டும், ரசிகர்கள் மன்றங்கள் இருக்கவேண்டும், தங்களை திரையில் பார்த்தாலே ரசிகர்கள் விசில் அடித்து ‘தலைவா’ என கத்த வேண்டும், தங்களின் படம் ரிலீஸாகும்போது ரசிகன் அவனின் சொந்த செலவில் பெரிய பெரிய பேனர் மற்றும் கட் அவுட் வைக்க வேண்டும், டிக்கெட் விலை 5 ஆயிரம் என்றாலும் கொடுத்து வாங்கி படம் பார்க்க வேண்டும், குறிப்பாக தங்களை கடவுள் போல பாவிக்க வேண்டும் என நினைப்பார்கள்.
ஆனால், அஜித் அப்படி இல்லை. இது எதையுமே தன்னுடைய ரசிகர்கள் செய்யக் கூடாது என நினைப்பார். நடிப்பு என்னுடைய தொழில். சினிமா என்பது பொழுதுபோக்கு. படம் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.. உங்களுக்கு ஒரு வேலை இருப்பது போல சினிமாவில் நடிப்பது என் வேலை.. அதோடு நின்று விடுங்கள். உங்களின் வாழ்க்கையை பாருங்கள். குடும்பத்தை கவனியுங்கள் என பல வருடங்களாக தொடர்ந்து செல்லி வருகிறார்.

ஆனால், அவரின் ரசிகர்கள் அதை கேட்பதே இல்லை. ‘விஜய் வாழ்க.. அஜித் வாழ்க.. என சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்?’ என திரைத்துறையில் கேட்ட ஒரே நடிகர் அஜித் மட்டுமே. விஜயோ, ரஜினியோ கூட இப்படி கேட்டதே இல்லை. இவ்வளவு ரசிகர் கூட்டம் இருந்தும் தலையில் எந்த கர்வத்தையும் ஏற்றுக்கொள்ளாவதவர் அஜித். பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை கலைத்தும்விட்டார்.
அதனால்தான் எல்லோருரிடமும் மிகவும் எளிமையாக பழகுகிறார். அஜித் நடந்துகொள்ளும் விதம், அவர் பழகும் விதம் ஆகியவை பற்றி அவருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில்தான், தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக பல படங்களிலும் நடித்துள்ள ஆர்த்தி அஜித் பற்றி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.
அஜித் சாரின் ஒரு படத்தில் நான் நடித்தேன். படப்பிடிப்பில் அவர் இருந்தபோது தனது தலையின் பின்னால் ‘தல’ என்கிற எழுத்தில் முடி அலங்காரம் செய்திருந்த ஒரு தீவிர ரசிகர் ’தல தல’ என கத்திக்கொண்டே இருந்தார். அஜித் அவரை பார்த்ததும் தனது தலையை காட்டினார். அவரை உள்ளே விட சொன்னார் அஜித். அந்த ரசிகர் அருகே வந்ததும் பளார் என கன்னத்தில் ஒரு அறைவிட்டார்.

‘இது என்ன தலையில் தல என எழுதுவது.. அசிங்கமாக இல்லையா?. உன் அப்பா அம்மா இத பார்த்தா சந்தோஷப்படுவாங்களா?. நீ இப்ப உடனே போய் மொட்டை அடிச்சிட்டு வந்து என்கிட்ட காட்டணும்’ என சொல்லி அவனுக்கு காசை கொடுத்து அனுப்பி வைத்தார். அவர் சொன்னது போலவே அந்த ரசிகர் மொட்டை அடிச்சிட்டு வந்து அஜித்திடம் காட்டினார். அதன்பின் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அஜித் ‘இப்படியெல்லாம் செய்யக்கூடாது. படம் பாக்குறதோட நிறுத்திக்கணும். அன்பு மனசுல இருந்தா போதும்’ என அந்த ரசிகருக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். இதுதான் அஜித் சாரின் சுபாவம்’ என ஆர்த்தி சொல்லியிருந்தார்.