உதிரிப்பூக்களில் மலர்ந்த உதிரா பூ நடிகை...திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த அழகிய சுவடுகள்
அமைதி தவழும் நீள்வட்ட அழகிய முகம். சோகம் கலந்த மான்போன்ற விழிகளை உடையவள். தமிழ், கன்னடம், மலையாளம் என பன்மொழித்திரைப்படங்களில் முத்திரை பதித்தவர். தமிழ்ப்படங்கள் குறைவு தான். இயக்குனர் மகேந்திரனின் உதிரிப்பூக்களில் அறிமுகமானார். நண்டு படத்தில் நடிப்பில் புதிய பரிமாணத்தை உண்டாக்கினார்.
அவர் தான் நடிகை அஸ்வினி. இவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.
1958ல் கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர். படிப்பில் ஆர்வமிக்கவர். கலை ஆர்வத்தில் ஈடுபாடு உடையவர். மெட்ரிக் பள்ளியில் படித்த இவர் கணிதத்தில் புலி. பிஎஸ்சி. கெமிஸ்ட்ரி படித்து முடித்தார்.
கன்னடத்தில் முதலில் கால் பதித்தார். 1977ல் சித்தலிங்கய்யா இயக்கத்தில் ஹேமாவதி என்ற திரைப்படத்தில் நடித்தார். இதுதான் அவரது முதல் படம். ஆன்மிக பக்தி, ஒரே குலம் ஒருவனே தேவன், இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கதைக்கருவில் தயாரான படம். இந்தப்படத்தில் ஜி.வி.அய்யர், உதயகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கன்னடத்தில் வெற்றிகரமாக ஓடியது.
கன்னட இயக்குனர் பி.எஸ்.ரங்கா தயாரித்த சாவித்ரி என்ற படத்தில் சோம சேகரராவ் உடன் இணைந்து நடித்தார்.
அந்த வேளையில் இயக்குனர் மகேந்திரன் தனது படத்திற்கு புதிய கதாநாயகியைத் தேடி வந்தார். அப்போது தான் அவருக்கு சாவித்ரி படத்தில் நடித்த அஸ்வினி நினைவுக்கு வந்தது. 1979ல் விஜயன், சரத்பாபு, சுந்தர், மதுமாலினி நடிப்பில் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார்.
என்ன ஒரு அபார நடிப்பு...அஸ்வினி முகத்தில்...முதல் படத்திலேயே முத்தாய்ப்பாக தனது கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அப்படியே உள்வாங்கி நடித்து அசத்தினார். அது அவருக்கு முதல் படம் என்றே சொல்ல முடியாது. அந்த அளவு அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட ரசிகனின் உள்ளத்திலும் அவர் இடம்பிடித்து விடுவார்.
இந்தப்படத்தில் லட்சுமி என்ற லட்சுமிகரமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஊர் பள்ளியின் தலைவர் தான் நினைத்தது தான் நடக்க வேண்டும்...தனக்கு எதிராக யாரும் வரக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மை கொண்ட விஜயனின் மனைவி, இருகுழந்தைகளின் தாயார், சாருஹாசனின் தங்கை லட்சுமி என பல்வேறு முகபாவங்களில் ஜொலித்தார் அஸ்வினி.
இந்தப்படத்தில் அஸ்வினி தனது கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். ஏக்கம், சோகம் இழையோடிய முகபாவனைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு மென்மையாக நடித்து தாய்க்குலங்களின் பேராதரவைப் பெற்றார்.
கணவராலும், மாமியாராலும் நோயாளிப் பெண் என்ற முத்திரை குத்தப்பட்டும், இதையே சாக்காகக் கொண்டு விஜயன் மதுமாலினியைத் திருமணம் செய்ய நினைப்பதும், தனக்குத் தடையாக உள்ள அஸ்வினி மீது பழிசுமத்தி அவரை விலக்க நினைப்பதும் என சுயநலத்துடன் தனது கேரக்டரைக் கொண்டு நடித்திருந்தார் விஜயன்.
இருந்தாலும் கணவனின் ஆசைக்கு இடம் தராமல் இறுதியில் அஸ்வினி இறந்து போவது அனைவரின் உள்ளங்களையும் தொட்டுச் சென்றது. இந்தப்படத்தில் அஸ்வினிக்கு குறைவான வசனம் தான். இளையராஜாவின் இசை, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் அழகிய கண்ணே, உறவுகள் நீயே என்ற பாடல் இப்போது கேட்டாலும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும்.
இந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார் அஸ்வினி. இது வெள்ளிவிழாப்படமாக அமைந்தது. நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் 100 சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. 1980ல் கே.பாக்யராஜ் கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஒரு கை ஓசை படத்தில் அஸ்வினி நடித்தார். இந்தப்படத்தில் கலகலவென அஸ்வினி வசனங்களைப் பேசி நடனமாடி நடித்திருப்பார்.
இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. படத்தின் தலைப்பைப் போல பாக்யராஜ் இறுதியில் யாரையும் திருமணம் செய்யாமல் ஒரு கை ஓசை போல நடித்து இருப்பார். எம்எஸ்.வி.இசையில் முத்துத்தாரகை என்ற படத்தில் நடித்து அசத்தினார்.
அடுத்து 1981ல்மகேந்திரனின் இயக்கத்தில் சுரேஷ், செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரது நடிப்பில் நண்டு என்ற படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் அஸ்வினி நடித்து அசத்தினார். அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா என்ற பாடல் இப்போது கேட்டாலும் நம்மை ரசிக்கச் செய்யும். ஆனால் இந்தப்படம் ஓடவில்லை.