ஏவிஎம் ஸ்டூடியோவுக்குள் மெய்யப்பச் செட்டியாரையே வரக்கூடாதுன்னு கண்டிஷன் போட்ட நடிகை… இது புதுசா இருக்கே!!
1962 ஆம் ஆண்டு பானுமதி, சௌகார் ஜானகி, எஸ்.வி.ரங்காராவ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அன்னை”. இத்திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தனர்.
“அன்னை” திரைப்படம் உருவாவதற்கு முன்பு ஏவிஎம்முடன் ஏற்பட்ட கருத்து மோதலில் “இனி ஏவிஎம் வாசலையே மிதிக்கப்போவதில்லை” என பானுமதி முடிவெடுத்திருந்தார். எனினும் “அன்னை” திரைப்படத்தில் பானுமதி நடித்தால்தான் மிகப் பொருத்தமாக இருக்கும் என ஏ.வி.மெய்யப்பச் செட்டியாருக்குத் தோன்றியதாம்.
இதனை தனது மகன்களான ஏ.வி.எம். சரவணன், குமரன் ஆகியோரிடம் கூறியபோது, அவர்கள் மறுத்துவிட்டனர். “பானுமதிதான் நம் ஸ்டூடியோ வாசலையே மிதிக்கமாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாரே, அவ்வாறு இருக்கும்போது எப்படி அவரை மீண்டும் அழைக்கமுடியும்” என கூறினார்கள். ஆனால் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் பானுமதி நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்ற முடிவில் திடமாக இருந்தார். மேலும் தனது மகன்களிடம் பானுமதியை நேரில் சந்தித்து ஒப்பந்தம் செய்து வருமாறும் கூறினார்.
அரை மனதுடன் ஏவிஎம் சரவணனும் மற்றவர்களும் பானுமதியை பார்க்க புறப்பட்டார்களாம். கூடவே “அன்னை” படத்தின் கதையை பானுமதியிடம் கூற ஆரூர்தாஸை அழைத்துக்கொண்டு போனார்களாம். பானுமதியை ஒப்பந்தம் செய்ய கையில் தாம்பூல தட்டுடன் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததை பார்த்த பானுமதி “என் பையனுக்கு வேற இடத்துலதானே திருமணம் செய்யப்போறோம். நீங்கள் ஏன் தாம்பூலத்தோடு வந்திருக்கிறீர்கள்” என கேட்டாராம்.
அதன் பின் அவர்கள் தங்களது புதிய திரைப்படத்திற்கு பானுமதியை ஒப்பந்தம் செய்ய வந்த விஷயத்தை கூறினார்களாம். மேலும் ஆரூர்தாஸ் “அன்னை” திரைப்படத்தின் கதையையும் முழுதாக கூறினாராம். கதை கேட்ட பானுமதிக்கு கதை மிகவும் பிடித்துப்போக, ஏவிஎம் ஒரு கதையை தேர்ந்தெடுக்கிறார் என்றால் அது சிறப்பான ஒன்றாகத்தான் இருக்கும் என பானுமதி அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததால் “அன்னை” திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் “அன்னை” திரைப்படத்தில் நடிக்க ஒரு கண்டிஷனையும் போட்டிருக்கிறார் பானுமதி. அதாவது “நான் இந்த படத்தில் நடித்து முடிக்கும் வரை, மெய்யப்ப செட்டியார் ஏவிஎம் ஸ்டூடியோவிற்குள் வரக்கூடாது. இந்த நிபந்தனைக்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் நான் இந்த படத்தில் நடிக்கிறேன்” என கூறினாராம். இதனை கேட்ட ஏவிஎம்மின் மகன்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
மேலும் கோபத்தில் “நாங்கள் கிளம்புகிறோம்” என கூறி அவர்கள் கிளம்ப முற்படும்போது “தாம்பூல தட்டை எடுத்துக்கொண்டு போங்கள். மெய்யப்பச் செட்டியார் எனது நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் நீங்கள் தாம்பூலத்தோடு வாருங்கள்” என கூறினாராம்.
வீட்டிற்கு திரும்பிய ஏவிஎம்மின் மகன்கள் ஏவிஎம்மிடம் பானுமதி கூறிய நிபந்தனை பற்றி மிகவும் கோபத்தோடு கூறினார்கள். “நீங்கள்தான் இந்த ஸ்டூடியோவிற்கு உரிமையாளர். உங்களையே ஸ்டூடியோவுக்குள் வரக்கூடாது என கூறினால் எவ்வளவு தெனாவட்டு இருக்கும்” என கடும்கோபம் கொண்டார்களாம்.
இதனை கேட்ட ஏவிஎம் “அதெல்லாம் விட்டுவிடுங்கள். பானுமதி நடிப்பதாக ஒப்புக்கொண்டாரே. அது போதும். ஒரு நல்ல படம் அமையவேண்டும் என்றால் சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும்” என கூறி அந்த நிபந்தனைக்கும் ஒப்புக்கொண்டாராம். அதன் பிறகுதான் “அன்னை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.