நாட்டிய அரங்கேற்றத்தில் சொக்கிப் போன தயாரிப்பாளர்... முன்னணி நடிகர்களுக்கே சவால்விட்ட நடிகை!
எவரையும் கவர்ந்திழுக்கும் அழகிய தோற்றப்பொலிவு, நவரசங்களையும் மான் போன்ற விழிகளில் காட்டுபவர், பெண்மைக்கு அனைத்து அம்சங்களையும் பொருந்தியவர். வசீகர சிரிப்பு, சங்கீதம், நாட்டியக்கலைகளில் தேர்ந்தவருமான தமிழ்சினிமா வின் எவர்கிரீன் நடிகைகளில் ஒருவர் இவர். அவர் தான் தேவிகா.
தெலுங்கு இவரது தாய்மொழி என்றாலும் தமிழ், இந்தியில் அற்புதமாக பேசுபவர். தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம், கன்னடம் என பன்மொழிப்படங்களில் நடித்தவர்.
நினைக்கத்தெரிந்த மனமே, அமைதியான நதியினிலே ஓடம், நெஞ்சம் மறப்பதில்லை, சொன்னது நீதானா என்ற பாடல்களைக் கேட்டாலோ பார்த்தாலோ இவர் நம் நெஞ்சில் ஆழப்பதிந்து விடுவார்.
பல சூப்பர்ஹிட் படங்களின் நாயகியாகவும், தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நாயகியாக ஜொலித்தவரும் இவர் தான். தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். தேசிய விருதை வென்றுள்ளார். கவிஞர் கண்ணதாசனின் மதிப்பிற்குரிய கலைஞர்களில் இவரும் ஒருவராக இருந்துள்ளார்.
கரகாட்டக்காரனில் சக்கை போடு போட்ட நடிகை கனகாவின் தாயார் தான் தேவிகா.
1938ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரமிளா தேவி. இவருக்கு 2 அக்கா, 1 தம்பி உள்ளனர். இவரது குடும்பம் தந்தையின் பணி காரணமாக சென்னைக்கு இடம்பெயர்ந்தது. சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். வீட்டில் இவருக்கு செல்லப்பெயர் ராணி.
பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்ததும் இவரது பாட்டி பாட, இவர் எப்போதும் அதற்கேற்ப அற்புதமாக நடனமாடுவாராம். நவராத்திரியின் போதும் இதே போல பாட்டி பாட, இவர் அம்மன் வேடம் போட்டு நடனமாடி அசத்தியுள்ளார். பெற்றோரின் அனுமதியுடன் சங்கீதம், நாட்டியக்கலைகளைக் கற்க ஆரம்பித்தார்.
இவரது நாட்டிய அரங்கேற்றத்தைப் பார்த்து வியந்தார் தயாரிப்பாளர் வி.என்.ரெட்டி. தொடர்ந்து தனது படத்தில் பிரமிளாவை நடிக்க வைக்க பெற்றோரிடம் சென்று சம்மதம் வாங்கச் சென்றார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தொடர்ந்து தனது படத்தில் நாட்டியம் சம்பந்தமான காட்சியில் தான் நடிக்க உள்ளார் என்று விளக்கியதும் இறுதியில் பிரமிளாவின் பெற்றோர் சம்மதித்தனர்.
அந்தப் படம் தான் தெலுங்கில் வெளியான பொட்டிலு. 1955ல் என்டிஆர், அஞ்சலிதேவியுடன் ரேச்சுகா என்ற படத்திலும் நடித்தார். சொத்துக்கள் மூலம் ஏமாற்றப்பட்டதாலும், உறவுகள் பிரிந்ததாலும் மனதளவில் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகை பானுமதியின் சொந்தத் தயாரிப்பு மற்றும் கணவர் ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் காதல், காமெடி கலந்த மணமகன் தேவை என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து நடித்தார்.
இப்படத்தில் பானுமதியின் தங்கை சந்திரமதியாகத் தோன்றினார். தொடர்ந்து சிவாஜியுடன் ராணி லலிதாங்கி என்ற படத்தில் நடித்தார். இதிலும் பானுமதியின் தோழியாகத் தான் நடித்தார்.
ஜெமினி ஸ்டூடியோ காஸ்டியூமர் ராமராவ் மூலம் எஸ்.வி.சகஸ்ரநாமம் தலைமையில் இயங்கி வந்த நாடகக்குழுவில் நடிக்க ஆரம்பித்தார். சிவாஜி, முத்துராமன், எம்.என்.ராஜம், மைனாவதியின் நட்பும் ஆலோசனையும் கிட்டியது. 1957 முதல் 1962 வரை நாடக உலக கலைஞராக திகழ்ந்தார்.
பிரசிடன்ட் பஞ்சாட்சரம், பராசக்தி, பாம்பே மெயில், கண்கள் உள்ளிட்ட எண்ணற்ற மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்றார். 1957ல் தயாரிப்பாளர் எம்.ஏ.வேலு இவரது நடிப்புத்திறனைக் கண்டு முக்தா சீனிவாசனின் இயக்கத்தில் எஸ்எஸ்ஆர் நடிப்பில் வெளியான முதலாளி படத்தில் தேவிகா என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.
இது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே என்ற பாடலில் இவரது நடிப்பைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது.
அதன் பின்னர், சகோதரி, களத்தூர் கண்ணம்மா, நாகநந்தினி உள்ளிட்ட படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் தான் பாவமன்னிப்பு. 1961ல் ஏவிஎம் தயாரிப்பில் வெளியானது.
நடிகர் திலகம் சிவாஜியின் ஜோடியாக நடித்து அசத்தினார். அத்தான் என்னத்தான், பாலிருக்கும் பழமிருக்கும் என்ற பாடல்களில் இவரது நவரச நடிப்பைக் கண்டு ரசிக்காதவர்களே இல்லை.
எம்ஜிஆருடன் ஆனந்த ஜோதி, சிவாஜியுடன் பலே பாண்டியா, பந்தபாசம், அன்னை இல்லம், குலமகள் ராதை, ஆண்டவன் கட்டளை, கர்ணன், முரடன் முத்து, பழனி, நீலவானம், சாந்தி, அன்புக்கரங்கள், சத்யம் உள்ளிட்ட படங்களில் நடித்து முத்திரை பதித்தார். ஜெமினிகணேசனுடன் ஆடிப்பெருக்கு, சுமைதாங்கி, இதயத்தில் நீ, வாழ்க்கைப்படகு ஆகிய படங்களில் நடித்தார்.
கல்யாண்குமாருடன் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை படங்களிலும், எஸ்.எஸ்.ஆருடன் வானம்பாடி, மறக்க முடியுமா படங்களிலும் முத்துராமனுடன் திருவிளையாடல், ஏபி.நாகராஜன் இயக்கத்தில் சரஸ்வதி சபதம், ஜெய்சங்கருடன் தெய்வீக உறவு ஆகிய படங்களிலும் நடித்தார். இவரது பிரமாதமான நடிப்பு முன்னணி நடிகர்களுக்கே சவால் விடுவதாக அமைந்தது.
வானம்பாடியில் தூக்கனாங்குருவிக்கூடு, நெஞ்சம் மறப்பதில்லையில் அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை, சுமைதாங்கியில் எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா, ஆண்டவன் கட்டளையில் அழகே வா...அருகே வா...பலே பாண்டியாவில் அத்திக்காய் காய் காய், வாழ்க்கைப் படகுவில் ஆயிரம் பெண்மை மலரட்டுமே, திருவிளையாடலில் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல், கர்ணனில் கண்கள் எங்கே என்ற பாடல்களையும் பார்த்தால் அவை காலத்தால் அழியாத காவியப்பாடல்கள் என்று நாம் உணர முடியும்.
அந்த பாடல்களுக்குத் தானே பாடுவது போல் அற்புதமான வாயசைப்பும், முக பாவனையும் என தேவிகா பின்னி பெடல் எடுத்திருப்பார். 1965ல் பீம்சிங் இயக்கத்தில் வெளியான நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் பழநி என்ற படத்தில் அவருக்கு இணையாக நடித்த போது பீம்சிங்கின் உதவி இயக்குனர் தேவதாஸ் உடன் ஏற்பட்ட நட்பு காதலாகி திருமணத்தில் முடிந்தது.
பின்னர் தயாரிப்பாளராக வெகுளிப்பெண் என்ற படத்தை வெளியிட்டார். இந்தப்படத்தில் ஜெமினிகணேசன் நடித்து இருந்தார். படம் தேசிய விருதைப் பெற்றது. இதே படத்தில் முத்துராமன், சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா உடன் தானும் நடித்து இருந்தார்.
இத்தம்பதியினருக்கு கனகா என்ற மகள் பிறந்தார். இந்நிலையில் தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். கரகாட்டக்காரனின் கனகாவின் படவாய்ப்புகளைக் கவனிக்கத் தொடங்கினார். நடிப்பின் ராணியாகத் திகழ்ந்த தேவிகா 2002ல் காலமானார்.