எம்ஜிஆரிடம் கற்றுக்கொண்ட கோவை சரளா!... சம்பாதிக்கும் பணத்தை இப்படித்தான் செலவழிக்கிறாராம்!..
முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் கோவை சரளா. இவர் செந்தில், கவுண்டமணி, விவேக், வடிவேலு என பல நடிகர்களுடன் திறமையைக் காட்டியுள்ளார். நகைச்சுவை, குணச்சித்திர வேடம் என அசத்தும் இவர் ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிப்பில் வெளுத்து வாங்கி தாய்மார்களையும் கவர்ந்தவர். இதுவரை 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்து அசத்தியவர். தனிப்பட்ட முறையில் திருமணமே செய்யாமல் நடிப்பு நடிப்பு என இருந்து விட்டார்.
தன் சொந்த ஊரான கோவை பாஷையை படங்களிலும் அள்ளித் தெளித்து நக்கலும், நய்யாண்டியுமாக இவர் பேசும் வசனங்களும், அந்த கொங்கு தமிழ் உச்சரிப்பும் சிரிப்பே வராதவர்களுக்கும் வரவழைத்து விடும். இவரது அசாத்திய திறமையைக் கண்டு கொண்ட உலகநாயகன் கமலும் தனக்கு ஜோடியாக இவரை சதிலீலாவதி படத்தில் நடிக்க வைத்தார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க... தூக்கி வச்சு கொண்டாடுனாங்க.. ஆனா, ஒரே பாட்டில் காலி பண்ணிய கோட்…யுவன் கொடுத்த திடீர் ஷாக்!
இவர் பேசும் டயலாக்குகளே பஞ்சாகத் தான் இருக்கும். ஒரு படத்தில் என்ன இங்க சத்தம், என்ன இங்க சத்தம்னு சொல்வாரு. கரகாட்டக்காரன் படத்தில், என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்..னு சொல்லும் போது தியேட்டரில் சிரிக்காதவர்களே இருக்க முடியாது. இன்னொரு படத்தில் தொறை இங்கலீஷ் எல்லாம் பேசுதுன்னு சொல்வார்.
எம்ஜிஆரின் தீவிர ரசிகை இவர். ஒரு முறை எம்ஜிஆர் கோவை வந்த போது சரளாவை ஒருவர் அவரிடம் அறிமுகம் செய்து வைத்தாராம். அப்போது உனக்கு நிறைய திறமை இருக்கு... என்று சொல்லி கைநிறைய உதவித்தொகையை அள்ளி வழங்கினாராம். அந்த உதவித்தொகையில் படித்த அவர் பிற்காலத்தில் எம்ஜிஆரைப் போல நாமும் பிறரைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தாராம். தன் பள்ளிப்படிப்பு முடிந்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். தந்தையும், அக்காவும் சம்மதிக்க வாய்ப்பு தேடி அலைந்தார். சென்னைக்கு வந்தார்.
அங்கு இயக்குனர் பாக்கியராஜை சந்தித்தார். அவரது பேச்சால் பாக்கியராஜ் அசந்து போய், தனது முந்தானை முடிச்சு படத்தில் சிறு வேடம் கொடுத்து நடிக்க வைத்தாராம். அன்று அவருக்கு சரளா தான் பெயர். பத்திரிகையாளர்கள் பெயருக்கு முன் ஊரான கோவையைச் சேர்க்கலாமா என கேட்டு, அப்படியே பெயரை வைத்தார்களாம். அன்று முதல் கோவை சரளாவானார்.
வைதேகி காத்திருந்தாள், உயர்ந்த உள்ளம், சின்ன வீடு, ஜப்பானில் கல்யாண ராமன் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். காஞ்சனா வரிசைப்படங்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார். சகோதரி, சகோதரர்களின் பிள்ளைகளை வளர்த்து வருகிறார். ஏராளமான ஏழைக்குழந்தைகளின் படிப்பு, முதியோர் நலன்களில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்.