சிவாஜியையே தூக்கி சாப்பிடுகிற மாதிரி நடிச்சிட்டியேம்மா... யாரு எந்தப் படத்துல நடிச்சாங்கன்னு தெரியுமா?
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என இருதலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை லட்சுமி. இவர் ஹீரோயினாக நடித்ததை விட குணச்சித்திர நடிகையாக நடித்ததைத் தான் ரசிகர்கள் ரொம்பவே ரசித்தனர்.
எம்ஜிஆர், சிவாஜியுடன் இணைந்து நடித்த அனுபவங்களை ஒருமுறை லட்சுமி இவ்வாறு தெரிவித்துள்ளார். 1972ல் இதயவீணை படத்தில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்தேன். அப்போது காஷ்மீரில் விருந்து கொடுத்த எம்ஜிஆர் விரைவில் தமிழகத்திற்கும் தரப்போவதாக சொன்னார். அப்போது எனக்கு அரசியல் பற்றி தெரியாது.
அந்தப்படத்தின் டப்பிங்கில் கூட விரைவில் அரசியலுக்கு வருவேன் என்ற மாதிரியான வசனங்களை மறைமுகமாக பேசினார். அதுகூட அவர் கட்சி ஆரம்பித்ததும் தான் புரிந்தது. அவ்வளவு மக்காக நான் இருந்தேன்.
சிவாஜியுடன் இணைந்து ராஜராஜசோழன் படத்தில் நடித்தேன். அந்தப்படத்தில் ஒரு நீளமான வசனத்தைப் பேசி நடித்தேன். அப்போது வசனம் பேசியதும் என் தலையில் இருந்த கிரீடத்தைக் கழற்றி வைத்து விட்டுச் செல்வேன். அந்தக் காட்சியைப் பார்த்த பலரும் என்னிடம், சிவாஜியையே தூக்கி சாப்பிடுற மாதிரி நடித்துவிட்டாயே என பாராட்டினர்.
நான் அதிர்ந்தே போனேன். அந்தக்காட்சியில் நான் எப்படி நடிக்க வேண்டும் எப்படி வசனம் பேச வேண்டும் என்று சொல்லித் தந்ததே அவர் தான் என்றார். அவர் மட்டும் சொல்லித்தர வில்லைன்னா காட்சி அவ்ளோ சிறப்பா வந்துருக்காது என்றார் லட்சுமி.
லட்சுமியின் இயற்பெயர் வெங்கடமகாலெட்சுமி. 1975ல் ஜெயகாந்தனின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்தப் படத்தில் நடித்ததற்காக லட்சுமி சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக வந்து அசத்தினார். இவரது மகள் ஐஸ்வர்யா. இவரும் படங்களில் நடித்து வருகிறார். இவர் வேல், ஆறு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தென்றல், பாரிஜாதம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.