அண்ணே...உங்களுக்கு இந்தத் தங்கச்சி மேல இத்தனை பாசமா...?! கதறி அழுத மனோரமாவைத் தேற்றிய பிரபலம்..!!!

Manorama
நடிகை மனோரமா 2001ல் சிவாஜி பற்றிய தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதன் விவரம்..
எனக்கும் சிவாஜிக்கும் உள்ள உறவு அண்ணன் தங்கை உறவு. இதை நிரூபிக்கும் வகையில் என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அதை என்னால் மறக்க முடியாது.
எனக்கு எப்பொழுதுமே எல்லாவகையிலும் மிகப்பெரிய துணையயாக பக்கபலமாக இருந்தவர் என் தாயார். அப்படிப்பட்ட அவர் திடீரென ஒரு நாள் இறந்து போனார். முதல் ஆளாக என் வீட்டிற்கு ஓடோடி வந்தவர் நடிகர் திலகம் தான். என்னை மிகவும் கஷ்டப்பட்டுத் தேற்றினார்.
என்னையும் என் வீட்டில் உள்ளோரையும் நெகிழச் செய்யும்படி சிவாஜி ஒரு செயலைச் செய்தார். எங்கள் குல வழக்கப்படி தாயார் மறைந்ததால் முதலில் மகன் தான் கோடித் துணியைப் போர்த்த வேண்டும். ஆனால் எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லை.

Sivaji, Manorama
அதை நினைத்து நான் அழுதபோது சிவாஜி ஒரு விலை உயர்ந்த வெண்ணிறப் பட்டுப்புடவையை எனது உடன் பிறந்த சகோதரர் என்ற முறையில் தாயாரின் உடல் மீது போர்த்தினார். அண்ணே உங்களுக்கு இந்தத் தங்கச்சி மேல இத்தனை பாசமா...என கதறி அழுதேன். என்னைப் பார்த்து என்னைக்கும் நீ எனக்கு தங்கச்சி தாம்மா என்றார்.
வசதி இருப்பவர்கள் நினைத்தபடி எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தால் தங்கள் உடல் உபாதையைத் தீர்த்துக் கொள்ளக்கூட பிறரது உதவியை நாட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும்.
அப்படி யாருக்கும் வரக்கூடாது. சிவாஜி இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் டாக்டர் நாளை முதல் உங்களுக்கு டயலாசிஸ் செய்ய வேண்டும் என்றார். உடனே சிவாஜி விருட்டென படுக்கையில் இருந்து எழுந்து நாளை முதல் டயாலிசிஸா...இன்னைக்கே நான் போய் சேர்ந்திடணும்...நான் சீப்பட்டு, சின்னாபின்னப்பட்டு இழிவாக சாக விரும்பல என ஒருவித உறுதியோடு கூறினார்.
அவர் சொன்னபடி மறுநாள் மறைந்தார். வாழும் போது மட்டுமின்றி இறக்கும்போதும் தான் நினைத்தது போல கம்பீரமாக இறந்தது திரை உலகில் சிவாஜி மட்டுமே..!

Sivaji3
எனக்கு ஒரே ஒரு ஆதங்கம் உண்டு. ஆயிரமாயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய அவரது ஒளி பொருந்திய கண்களை பாதுகாப்பாக நாம் வைத்திருக்கத் தவறிவிட்டோம்.
அவரது உடல் தகனம் செய்யப்பட்டபோது அந்தக் கண்களும் எரிந்து சாம்பலானதை நினைக்கும்போது என்னால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.