மாதவிக்காக நண்டு மசாலா கொண்டு வந்து உணவுக்கு அழைத்த பிரபல நடிகர் இவர் தான்..!
1980, 90களில் கொடிகட்டிப் பறந்த நடிகை மாதவி. இவரைப் பார்த்தால் பார்க்கணும்...பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும். அவ்வளவு பேரழகு உடையவர். இப்போது இவரது பாடலை யுடியூப்களில் பார்த்தாலும் அது எவர்க்ரீன் சாங்காகவே இருக்கும். அப்பேர்ப்பட்ட அழகி மட்டும் அல்ல. இவர் நடிப்பிலும் சூரப்புலி. திறமைசாலியான இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம், ஒரியா என 7 மொழிகளில் நடித்து அசத்தியவர் மாதவி.
தில்லு முல்லு 1981ல் வெளியானது. ரஜினியுடன் இவரது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன படம் இது. கர்ஜனை 1981ல் வெளியானது. தம்பிக்கு எந்த ஊரு 1984ல் வெளியானது. இதில் பணக்கார திமிர் பிடித்த பெண்ணாக வரும் மாதவி அழகு, ஆணவம் என துவங்கி பணிவு காதல் என சிறப்பு சேர்த்து நடித்திருப்பார். மாதவியின் உடையலங்காரம் வெகு அழகாக இருக்கும்.
காதணி முதல் கைப்பை வரை அனைத்தும் மாடல் தான். இதில் வரும் காதலின் தீபம் ஒன்று பாடல் மறக்க முடியாதது. இது மாதவியின் நடிப்புக்கு சிறந்த சான்று. உன் கண்ணில் நீர் வழிந்தால் 1985ல் வெளியானது. விடுதலை 1986ல் வெளியானது. 1990ல் வெளியான படம் அதிசயபிறவி. ஒரே ஒரு பாடல் காட்சியில் நடிகை மாதவி நடித்திருந்தார். இதில் தேவலோக ரம்பையாக மாதவி நடித்திருந்தார்.
கமல் படங்கள்
1981ல் வெளியான டிக் டிக் டிக். 1981ல் வெளியான ராஜபார்வை. 1981ல் வெளியான எல்லாம் இன்பமயம். 1983ல் வெளியான சட்டம். இந்தப்படத்தில் மாதவியின் நடிப்பு அட்டகாசம். 1985ல் வெளியான காக்கி சட்டை. 1985ல் வெளியான மங்கம்மா சபதம் ஆகிய படங்களில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார். ராஜபார்வை படம் மாதவியின் அழகை வெளிச்சம் போட்டு காட்டியது. துறுதுறு என இருக்கும் சுட்டிப்பெண்ணாக நான்சி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
அந்தி மழை பொழிகிறது பாடல் எவர்கிரீன் ஹிட். அழகே அழகு தேவதை பாடல் மாதவியின் அழகை இன்றும் நம் காதில் தேனாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது. டிக்டிக்டிக் பாடலில் துடுக்காகவும், மிடுக்காகவும் மாதவி தனித்துவமாக பிரகாசித்திருந்தார். காக்கிச்சட்டை படத்தில் திமிரும், அழகும் கொண்டு அட்டகாசம் செய்து இருப்பார். பூப்போட்ட தாவணி பாடலில் அவருக்காகவே பல ரசிகர்கள் படம்பார்க்க வந்தனர்.
தமிழ்சினிமாவில் கண்களால் பேசியவர்கள் பலர் இருந்தாலும் இவர் பேசும் கண்களை உடையவர். 1980, 90களில் வலம் வந்த இவர் அகல கண்ணழகி மாதவி, தில்லுமுல்லு மாதவி, டிக் டிக் டிக் மாதவி, ராஜபார்வை மாதவி என பல பெயர்களில் ரசிகர்கள் அழைத்து மகிழ்ந்தனர். கமல், ரஜினி, மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, ராஜ்குமார், அமிதாப்பச்சன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவரது சொந்த ஊர் ஹைதராபாத். இவரது முழு பெயர் அல்ல துர்கம் மாதவி. 14.9.1962ல் பிறந்தார். இவரது பெற்றோர் அல்லதுர்கம் கோவிந்தசாமி - அல்லதுர்கம் சசிரேகா. இவருடன் ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை ஹைதராபாத்தில் உள்ள ஸ்டான்லி பள்ளியில் முடித்தார். சிறுவயதிலேயே நாட்டியம் மீது அலாதி ஆர்வம் கொண்ட இவர் முறையான பரதநாட்டியம் பயின்றார்.
இதன் மூலம் தெலுங்கு திரையுலகில் துருப்பு படமரா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இது தமிழ்சினிமாவில் வெளியான அபூர்வ ராகங்களின் தெலுங்கு ரீமேக். தமிழில் ஜெயசுதா நடித்த கதாபாத்திரத்தில் மாதவி தெலுங்கில் நடித்திருந்தாள். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அமர தீபம், மரோசரித்ரா, பிரானன் காரடு, தாயாரம்மா பங்காரய்யா என பல தெலுங்கு படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பினார். இவற்றில் கமல் உடன் நடித்த படம் தான் மரோசரித்ரா. தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியுடன் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் புதிய தோரணங்கள் படத்தில் அறிமுகமானார். கே.பாலச்சந்தர் இயக்கிய எங்க ஊர் கண்ணகி படத்தில் இருந்து தமிழ்சினிமா ரசிகர்களைக் கவரலானார்.
சிவாஜியுடன் அமர காவியம் படத்தில் நடித்ததை என்னால் மறக்க முடியாது. காரணம் அசைவ உணவை நான் மிகவும் விரும்பி சாப்பிடுவேன். குறிப்பாக நண்டு எனக்கு பிடித்த உணவு என்றாராம். அப்போது ஒருமுறை மதிய உணவு இடைவேளைக்கு அழைத்த சிவாஜி மாதவிக்காகவே தயாரான நண்டுமசாலாவை கொடுத்தாராம். இதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட மாதவியிடம் நான் தான் உனக்குப்பிடிக்குமே என்று வீட்டில் செய்து அனுப்பச் சொன்னேன்.
என் மனைவி அனுப்பியிருக்கிறாள் என்றார். இந்த நிகழ்வை தன் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது என்றாராம். நடிப்பு விஷயத்தில் அவரிடமிருந்து ஏராளமாக நான் கற்றுக்கொண்டேன் என்றார் மாதவி.