150க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் நடிக்க பிரபல இயக்குனரிடம் வாய்ப்பு கேட்ட நடிகை

by sankaran v |
150க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் நடிக்க பிரபல இயக்குனரிடம் வாய்ப்பு கேட்ட நடிகை
X

rohini

நடிகை ரோகிணி தென்னிந்திய திரையுலகில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். இவர் தெலுங்கு படவுலகில் அறிமுகமாகி மலையாளத்தில் வளர்ந்து வந்தார். தமிழ்சினிமாவுக்கு வந்ததும் இவர் மெருகேற்றப்பட்டார். யதார்த்தமான நாயகிகளுள் இவரும் ஒருவர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
45 ஆண்டுகளான பின்பும் இன்றும் இளமைத் துடிப்புடன் நடித்துக் கொண்டுள்ளார்.

நடிப்பு, சிங்கிள் பேரன்ட், டப்பிங் கலைஞர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர். இவர் சிறந்த சமூக ஆர்வலர். பெண்ணீயம் பற்றி யதார்த்தமாக பேசி பலரது பாராட்டையும் பெற்றவர். அப்பாவின் வற்புறுத்தலுக்காக சினிமாவிற்குள் வந்தார்.

Rohini

ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் அருகில் அனகப்பள்ளி என்ற கிராமத்தில் டிச.15, 1969ல் பிறந்தார். பெற்றோர் ராமநாயுடு - சரஸ்வதி தம்பதியினர். ரோகிணிக்கு 5 வயது இருக்கும்போதே இவரது தாயார் இறந்து விடுகிறார். இவரது தந்தை ராமநாயுடு கிராம பஞ்சாயத்து அதிகாரி பணியை விட்டு விட்டு சென்னை வந்து குடியேறினார்.

சில நாள்களில் வேறொரு பெண்ணுடன் 2வது திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அவருக்கு வரவே மகள் ரோகிணியை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் ஏறி இறங்கினார். ஆனால் உடன் அழைத்துச் சென்ற மகளுக்குத் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

1975 சிஎஸ்.ராவ் இயக்கத்தில் வெளியான யசோதா கிருஷ்ணன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே திறமையாக நடித்ததால் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ஜமுனா என தெலுங்கு சினிமாவின் உச்சநட்சத்திரங்களுக்கு பிடித்தமான குழந்தையானார். தொடர்ந்து 150 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

1975ல் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான மேயர் மீனாட்சி படத்தில் நடிக்க ரோகிணிக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீபிரியாவுக்கு தங்கையாகவும், ஊமையாகவும் நடித்தார். படம் பெரும் வெற்றி பெற்றது. 1976ல் சாண்டோ சின்னப்பா தேவரின் முருகன் அடிமை படத்தில் பாலமுருகனாக நடித்தார்.

பள்ளிக்குச் சென்று மற்ற குழந்தைகளைப் போல தானும் படிக்க வேண்டும் என்ற ஆசை ரோகிணிக்கு இருந்து வந்தது. இதனால் தந்தை அவருக்கு என்று ஒரு மாஸ்டரை வீட்டிற்கு வரவழைத்து தமிழ், தெலுங்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கச் செய்தார்.

பின்னர் 4ம் வகுப்பு வரை இவ்வாறு படித்த ரோகிணி சினிமாவிலிருந்து விலகி 5ம் வகுப்பு நேரடியாக பள்ளி சென்று படித்தார். திறமையான படிப்பால் ஒரே வருடத்தில் 7ம்வகுப்பு சென்றார். தொடர்ந்து ஹாஸ்டலில் தங்கிப் படித்த இவருக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் போனது. தந்தை விநியோகஸ்தராக பிசியாகி தொழிலில் நஷ்டம் ஏற்பட மீண்டும் ரோகிணியை சினிமாவுக்கு நடிக்க அழைத்தார். பிடிக்காத தொழிலை எப்படி செய்வது என்று கட்டாயத்தின்பேரில் செய்யத் தொடங்கினார். அப்போது நடித்துக்கொண்டே தனது பள்ளிப்படிப்பையும் கரசில் முடித்தார்.

1982ல் காக்கா என்ற மலையாளப்படத்தில் ரகுவரன், நிழல்கள் ரவி ஆகியோருடன் கதாநாயகியாக அறிமுகமானார். படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. பெரும் வெற்றி பெற்றது. அதில் இருந்து இவருக்கு நடிப்பு வாழ்க்கை பிடித்து விட்டது. தொடர்ந்து தமிழிலும் இவருக்கு பல நல்ல வாய்ப்பு கிட்டியது. பார்வையின் மறுபக்கம், இளமை காலங்கள், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், வளர்த்த கடா, பொன்மாலை பொழுது படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். 1985ல் வெளியான அண்ணி படத்தில் கதாநாயகியானார். தாய்க்கு ஒரு தாலாட்டு, புதுவாரிசு ஆகிய படங்களில் பாண்டியராஜனுக்கு ஜோடியானார். 1991ல் பாக்யராஜின் பவுணு பவுணு படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் ரோகிணி. தந்து விட்டேன் என்னை படத்தில் விக்ரமின் ஜோடி.

rohini

இரு படங்களும் வெற்றி பெறவில்லை. விடாமுயற்சியால் பாலுமகேந்திராவின் மறுபடியும் படத்தில் நடித்தார். படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. தொடர்ந்து கமலின் மகளிர் மட்டும் படத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். 1982ல் காக்கா படத்தில் நடிக்கும்போதே ரகுவரனுக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டு 1996ல் திருமணத்தில் முடிந்தது.

இவரது மகன் ரிஷி. நியாயமான சில காரணங்களுக்காக 2004ல் இருவரும் பிரிந்தனர். கேள்விகள் ஆயிரம் என்ற டிவி தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தினார். கமலின் விருமாண்டியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சரத்குமாரின் ஐயா, தாமிரபரணி ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். 9 ருபாய் நோட்டு, வாமணன், மாஸ்கோவின் காவிரி, நந்தலாலா, 3, தங்கமீன்கள், பாகுபலி, வேலைக்காரன், கோலிசோடா 2, டிராபிக் ராமசாமி, மகாமுனி என பல படங்களில் தனது யதார்த்தமான நடிப்பை தந்து அசத்தினார்.

Next Story