Cinema History
வாசமில்லா மலரிது…வசந்தத்தைத் தேடுது…80களில் ரசிகர்களின் மனதை கிறங்கடித்த நாயகி
நீள்வட்ட முகம். அமைதி, வசீகரப் புன்சிரிப்பு இவற்றுக்குச் சொந்தக்காரர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பன்மொழித்திரைப்படங்களில் நடித்தவர்.
ஒரு தலை ராகம் படத்தில் வாசமில்லா மலரிது…வசந்தத்தைத் தேடுது என்ற பாடலில் இவரது நடிப்பு அநாயசமாக இருந்தது. அப்போதைய இளம் ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் அடிக்கடி முணுமுணுக்கப்பட்டது.
80களில் ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்ட கதாநாயகிகளில் இவரும் ஒருவர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்காகத் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து கல்வி புரட்சியை மேற்கொண்டார்.
1960ம் ஆண்டு ஆந்திரா மாநிலம் ஹைதரபாத்தில் ரகு ராமையா, அத்வானி லட்சுமிதேவி தம்பதியரின் செல்ல மகள். இவரது இயற்பெயர் ரூபாதேவி. இவரது தாயார் கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்தவர். கலை ஆர்வமிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இயற்கையிலேயே இவருக்கு கலை ஆர்வம் மிகுந்து இருந்தது.
பள்ளியில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் நடனம், நாடகம் என தன் திறமையை வெளிக்காட்டினார். மகளின் கலை ஈடுபாட்டைக் கண்ட தாயார் தனது மகள் பாரம்பரிய நடனங்களில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சென்னையில் பிரபல நாட்டிய குருமார்களிடம் இணைத்து விட்டார்.
பரதம் போன்ற கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். இந்நிலையில் 1978 ஏரங்கி ஷர்மா இயக்கத்தில் எம்எஸ்.வி.யின் இசையில் நாராயண ராவ் நடிப்பில் நாலகா என்தரு என்ற தெலுங்குப்படத்தில் அறிமுகமானார்.
அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றதால் தமிழ்த்திரை உலகம் இவரைக் கண்டு கொண்டது. 1979ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஆர்.சுந்தரம் இயக்கத்தில் கணேஷ், ஜெயச்சந்திரன் ஆகியோரது நடிப்பில் வெளியான காளிகோயில் கபாலி என்ற படத்தில் சாரதா என்ற முக்கிய வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இந்தப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
இந்நிலையில் தனது கதைக்காக இயக்குனர் டி.ராஜேந்தர் கதாநாயகியைத் தேடி வந்தார். ரூபாவைப் பற்றி இவர் அறிந்ததும் தனது படத்தில் முதல் கதாநாயகியாக இவரை அறிமுகப்படுத்தினார். ஒரு தலை ராகம் என்ற அந்தப்படத்தில் புதுமுக நாயகர்கள், புதிய தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் அறிமுகமாகினர். டி.ராஜேந்தர் கதை, வசனம், இயக்கம், நடிப்பு, இசை என அனைத்தையும் கவனித்து படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கினார்.
இந்தப்படம் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் எடுக்கப்பட்டது. கல்லூரி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புக்குள்ளான படமானது. இந்தப்படம் முழுவதும் சேலை முந்தானையை தோளைச் சுற்றி போர்த்திக் கொண்டு நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
பொது நிகழ்ச்சிகளிலும் அவ்வாறே தோன்றினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம மாஸ் ஹிட்டானது. வாசமில்லா மலரிது…வசந்தத்தைத் தேடுது என்ற பாடல் இப்போது கேட்டாலும் நமக்குள் ஒரு துள்ளலை உண்டாக்கும். ஒரு வருடம் ஓடி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
சிவகுமாருடன் அன்று முதல் இன்று வரை, துணைவி, விஜயனுடன் வசந்த அழைப்புகள், கண்ணீர்ப் பூக்கள். சரத்பாபுவுடன் அந்தரங்கம் ஊமையானது, கனவுகள் கற்பனைகள், சங்கருடன் மவுன யுத்தம், பிரதாப் போத்தனுடன் எச்சில் இரவுகள் என்று பிரமிக்க வைத்தார் நடிகை ரூபா.
டெல்லி கணேஷ் உடன் எங்கம்மா மகாராணி, நாராயணராவுடன் நடமாடும் சிலைகள், துரை இயக்கத்தில் மயில், பி.மாதவன் இயக்கத்தில் ஆடுகள் நனைகின்றன ஆகிய படங்களும் இவர் நடிப்பில் பேசப்பட்டவை.
இவர் நடித்த படங்களில் அனைத்தும் இவரது நடிப்புக்குத் தீனி போடுபவையாக அமைந்தன. அதனால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பேற்றார் ரூபா.
ஒரு தலை ராகம் படத்தில் தனது தோழியாக நடித்த டி.ராஜேந்தரின் மனைவி உஷாவுடன் இன்று வரை நல்ல தோழியாக உள்ளார் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது. யாசகம் பெறுபவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட எச்சில் இரவுகள் படத்தில் பிரதாப் போத்தனுக்கு இணையாக ராஜாத்தி என்ற வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.