தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகம் என்றால் சிவாஜி. அதே போல நடிகையர் திலகம் என்றால் சாவித்திரி தான். எல்லாம் ரசிகர்கள் கொடுக்கும் பட்டம் தான். அந்த அளவுக்கு அவர்களது நடிப்புத் திறன் இருப்பதால் தான் இந்தப் பட்டம் எல்லாம் கொடுக்கப்படுகிறது.
சாவித்திரியைப் பொருத்தவரை அவரது கண்களே ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளைப் பேசி விடும் வல்லமை படைத்தவை. ஆந்திரா பூர்வீகம். தெலுங்கு தான் தாய்மொழி என்றாலும் தமிழ்ப்பட உலகில் கோலோச்சியவர். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் என பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து அபாரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடத்தைப் பிடித்தவர்.
இவர் பிறந்தபோது பெற்றோர்கள் இவரை சரசவாணி தேவி என்று 3 முறை சொல்லி வளர்த்தார்களாம். திரையுலகில் காலடி எடுத்து வைத்ததும் தான் அவரை சாவித்திரி என்று கொண்டாடினார்களாம். சிஸ்டா பூர்ணய்யா சாஸ்திரிகளிடம் இசை மற்றும் நடனத்தைக் கற்றுத் தேர்ந்தார். இவரது முதல் படம் கல்யாணம் பண்ணிப்பார். எல்.வி.பிரசாத் இயக்கியது. தமிழிலும், தெலுங்கிலும் சக்கை போடு போட்டது.
மனம் போல் மாங்கல்யம் என்ற படத்தில் ஜெமினிகணேசனுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார் சாவித்திரி. ஜெமினிகணேசனுக்குப் பொருத்தமான ஜோடி சாவித்திரி தான் என எல்லோரும் சொல்லும்படி ஆகி விட்டது. அந்தளவுக்கு இவர்களது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டானது. குணசுந்தரி, மாமன் மகள், மிஸ்ஸியம்மா என சாவித்திரியின் நடிப்பில் வந்த படங்கள் எல்லாமே வெற்றி தான். நிஜவாழ்க்கையிலும் இருவருமே ஜோடி சேர்ந்தனர்.

பாசமலர் படத்தில் சிவாஜிக்குத் தங்கையாக நடித்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார். இருவரும் ஒருவருக்கொருவர் உருகி உருகி நடித்து பாசமழையைப் பொழிவார்கள். இந்தப் படத்தைப் போல வந்த படங்களில் வேறு எந்த அண்ணன் தங்கை பாசமும் எடுபடவில்லை.
இந்தப்படத்தில் சாவித்திரிக்கு நடிப்பதற்கு என்று பல சவாலான காட்சிகள் உண்டு. அண்ணன் மீது பாசம், அதே நேரம் கணவர் மீது காதல், கணவரின் குடும்பத்தார் செய்யும் சூழ்ச்சிக்கும் தக்கவாறு நடிக்க வேண்டும். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு, துக்கம், ஏக்கம், தோல்வி என பல்வேறு விதமான உணர்ச்சிகளை முகத்தில் காட்ட வேண்டும். அதை கொஞ்சம் கூட குறை சொல்ல முடியாத அளவுக்கு அருமையாக நடித்து அசத்தியிருப்பார் சாவித்திரி.
1957ல் வெளியான படம் மாயாபஜார். இந்தப் படத்தில் எஸ்.வி.ரங்கராவ், சாவித்திரியின் நடிப்பைக் கண்டு ரசிகர்கள் அசந்து போனார்கள். அதே போல எம்ஜிஆருடன் இணைந்து நடித்த மகாதேவி. இந்தப் படத்தில் வாள் எடுத்து வீரதீரமாக சண்டை போடுவார்.
1952 முதல் சாவித்திரி நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன. அதனால் அவரை தயாரிப்பாளர்களின் நடிகை என்றும் இயக்குனர்களின் நடிகை என்றும் பாராட்டினர். 1960ல் களத்தூர் கண்ணம்மா படம் வந்தது. இதிலும் ஜெமினி, சாவித்திரி ஜோடி பிரகாசித்தது. இதே படத்தில்தான் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பானைபிடித்தவள் பாக்கியசாலி, குறவஞ்சி, பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பாவ மன்னிப்பு, பாத காணிக்கை, கற்பகம் என அனைத்தும் சாவித்திரியின் நடிப்பில் வெளியான முத்துக்கள். கொஞ்சும் சலங்கை படத்தில் சிங்கார வேலனே தேவா என்ற பாடலுக்கு சாவித்திரி காட்டும் முகபாவனைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
சிவாஜியின் 100வது படமான நவராத்தியிலும் இவரது நடிப்பு நடிகர்த திலகத்துடனே போட்டி போடும் அளவில் இருக்கும். சரஸ்வதி சபதம் படத்தில் இவரது நடிப்புக்கு சூட்டிங் முடிந்ததும் படக்குழுவினர் திருஷ்டி சுத்திப் போட்டார்களாம். அந்த அளவுக்கு சாவித்திரிக்கு மரியாதை கிடைத்துள்ளது.
எம்ஜிஆருடன் வேட்டைக்காரன், பரிசு படங்களில் அசத்தல் நடிப்புக்கு சொந்தக்காரியாக கலக்கியிருப்பார் சாவித்திரி. ரத்தத் திலகம் படத்தில் போராளியாக வரும் கேரக்டரில் நடித்து இருப்பார். காத்திருந்த கண்கள் படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடம். அப்பேர்ப்பட்ட நடிகையின் வாழ்வின் கடைசி காலங்கள் தான் சோகமயமாகி விட்டன.
