Cinema History
பாலுமகேந்திரா எதைச் செய்தாலும் என் வளர்ச்சிக்காகத் தான் செய்வார்… நடிகை ஓபன் டாக்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் மிகச்சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இன்று வரை எல்லா ரசிகர்களின் மனதிலும் நிறைந்துள்ளவர் தான் நடிகை ஷோபா. அதே சமயம் மிகச் சுமாரான படங்களிலும் அவர் நடித்துள்ளார். இதுபற்றி நிருபர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பதில் இதுதான்.
பாலசந்தர், பாலுமகேந்திரா படங்களில் பணியாற்றும்போது எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் இருக்கும். இந்தக் காட்சில நான் இப்படி நடிக்கலாமா என்று நான் அந்த இருவர்களிடமும் கேட்பேன். ‘நீ நடிச்சிக் காட்டும்மா எப்படி இருக்குன்னு பார்ப்போம்’னு சொல்வாங்க.
நான் நடிச்சிக் காட்டுனது ரொம்பப் பிடிச்சிருந்தா ‘அதே மாதிரியே நடி’ன்னு சொல்வாங்க. அந்த சுதந்திரம் எனக்கு இருந்தது. இந்த சுதந்திரத்தை எல்லா இயக்குனர்களிடமும் பெற முடியவில்லை.
சில படங்கள் உங்கள் மனதைக் கவர முடியவில்லை என்றால் அந்தப் போக்கும் ஒரு முக்கியமான காரணம். தனக்கும் பாலுமகேந்திராவுக்குமான நட்பு பற்றி அழுத்தம் திருத்தமாகவும் சொன்னார்.
சாதாரணமாக எந்த அடிப்படையிலே ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வீர்கள் என அந்த நிருபர் கேட்டார். சாதாரணமாக ஒரு படத்தின் கதையை நான், அம்மா, பாலுமகேந்திரா மூவரும் கேட்போம். அந்தக் கதை மூவருக்கும் பிடித்து இருந்தால் தான் நடிப்பேன். ஒரு வேளை பாலுமகேந்திராவுக்குக் கதை பிடிக்கலைன்னா அதில் நீங்க நடிக்க மாட்டீங்களான்னு அந்த நிருபர் கேட்டார்.
அதற்கு ‘நிச்சயமாக நடிக்க மாட்டேன். ஏன்னா பாலுமகேந்திரா எதைச் செய்தாலும் என் நன்மையைக் கருதித் தான் செய்வார். என் வளர்ச்சியை மனதில் வைத்துத் தான் செய்வார்’ என ‘பளிச்’சென்று பதில் சொன்னார் ஷோபா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
வேலி தாண்டிய வெள்ளாடு, அன்புள்ள அத்தான், பசி, மூடுபனி, அழியாத கோலங்கள் உள்பட பாலுமகேந்திரா இயக்கிய பல படங்களில் ஷோபா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலுமகேந்திராவைத் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் தனது 17வது வயதில் தற்கொலை செய்து கொண்டது திரை உலகையே உலுக்கியது.