பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய லதா பாண்டி எங்கே போனார்? என்ன ஆனார்?
லதா பாண்டி என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் வட்ட வடிவழகி. பம்ப்ளிமாஸ் முகத்தழகி ஸ்ரீதிவ்யா தான். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் சிறிதும் பிசகு வராதவாறு திறம்பட நடித்து அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் தான் இவர். லதா பாண்டியாக வலம் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் வாலிபர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். தமிழில் இவர் அறிமுகமான படம் இதுதான்.
சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. படம் முழுக்க நகைச்சுவை மழை தான். பாடல்களும் சூப்பர்ஹிட் ஆனது. சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவுடன் சத்யராஜ், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். திரைக்கதை எழுதி இயக்கியவர் பொன்ராம். இமான் இசை அமைத்துள்ளார்.
இவர் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர். மே.25, 1987ல் ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர், சகோதரி உள்ளனர். இவரது சகோதரியின் பெயர் ஸ்ரீரம்யா. இவரும் ஒரு நடிகை தான்.
ஸ்ரீதிவ்யா ஆந்திராவில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் படித்துள்ளார். 4வயதில் இருந்தே நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போது தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தார். தொடர்ந்து தெலுங்கு படமான அனுமான்ஜங்சனில் நடித்தார்.
இவரது முதல் படம் தெலுங்கில் 2010ல் வெளியானது. படத்தின் பெயர் மனசார. முதல் படமே தோல்வி. தொடர்ந்து 2012ல் மாருதி இயக்கிய படம் பஸ் ஸ்டாப். இதுதான் மாபெரும் வெற்றி பெற்றது.
பென்சில் படத்தில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து நடித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தொடர்ந்து ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளைக்கார துரை, மருது ஆகிய படங்களில் நடித்தார்.
இவற்றில் ஈட்டி படத்தில் அதர்வாவுடன் இணைந்து நடித்தார். 2017ல் சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்தில் ஜீவா உடன் இணைந்து நடித்தார். இதில் கிராமத்துப் பொண்ணாக வலம் வருகிறார். இந்தப்படமும் நகைச்சுவை கலந்த திகில் படம். கடைசியாக நடித்த படம் இதுதான்.
காக்கிச்சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார். இந்தப்படம் வெற்றி பெற்றது. வெள்ளைக்கார துரை படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஜோடியாக நடித்தார்.
2014ல் வெளியான இந்தப்படம் ஒரு நகைச்சுவைப்படம். எழில் இயக்கிய இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. முழுநீள நகைச்சுவைப் படம். 2016ல் விஷாலுடன் ஜோடியாக சேர்ந்து நடித்த படம் மருது. எம்.முத்தையா இயக்கத்தில் உருவான இந்தப்படம் ஒரு அதிரடி திரைப்படம். கிராமத்துப் பின்னணியில் உருவான கதைக்களம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.
2016ல் வெளியான மாவீரன் கிட்டு படத்தில் சற்று குண்டானார். அதற்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது. விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை சுசீந்திரன் இயக்கினார்.
தொடர்ந்து இன்னும் வெளியாகாத படம் ஒத்தைக்கு ஒத்த. அதர்வாவுடன் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.