50 வயசுல இரண்டாவது கல்யாணமா? - மறுமணம் குறித்து மனம் திறந்த நடிகை சுகன்யா
தனது மறுமணம் குறித்து நடிகை சுகன்யா நாயர் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சுகன்யா, கதாநாயகியாக நடித்த பிறகு தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை நடிகை சுகன்யா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அடுத்த ஆண்டே கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா, தனது கணவரை விவாகரத்து செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை சுகன்யா, தனது மறுமணம் குறித்து பேசியுள்ளார். "இதுவரை மறுமணம் குறித்த எண்ணம் இல்லை. அதற்காக மறுமணம் கூடாது என்று நான் கூறவில்லை. எனக்கு இப்போது 51 வயது ஆகிறது. மறுமணம் செய்து பிறக்க போகும் குழந்தை என்னை அம்மா என்று கூறுமா? பாட்டி என்று கூறுமா? என யோசனையாக உள்ளது. இது சங்கடத்தை ஏற்படுத்தினாலும் நிஜ வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டும். எது எப்படி நடக்க வேண்டுமோ? அது அப்படியே நடக்கட்டும்" என சுகன்யா நாயர் பேசியுள்ளார்.
நடிகை சுகன்யா, கேப்டன் விஜயகாந்த் உடன் சின்ன கவுண்டர் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானவர். தமிழ் சினிமாவில் கமலுடன் மகாநதி & இந்தியன், விஜயகாந்த் உடன் சின்ன கவுண்டர், சத்யராஜ் உடன் திருமதி பழனிச்சாமி, சரத்குமார் உடன் மகாபிரபு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து பல ரசிகர்களை சுகன்யா கவர்ந்தார்.
பரதநாட்டிய கலைஞரான சுகன்யா, தற்போது பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். டப்பிங் கலைஞராக மணிரத்னம் இயக்கிய கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில் நந்திதா தாஸ்க்கு பின்னணி குரல் கொடுத்தவர் தான் நடிகை சுகன்யா.
சின்னத்திரை தொடர்களிலும் சுகன்யா நடித்துள்ளார். சன்டிவி சேனலில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த ஆனந்தம் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இசையமைப்பாளராகவும் நடிகை சுகன்யா, ஒரு சில ஆல்பம் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.