நடிகர் அஜித்துக்கு நடிப்பது தொழில் மட்டும்தான். அவருக்கு பிடித்தமான விஷயங்கள் என்பது கார் ரேஸ், பைக் ரேஸ் என நிறைய இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவர் சினிமாவில் நடிக்க வந்ததே அந்த பணத்தில் ரேஸ் பைக் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒருபக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டே பைக் ரேஸிலும் அஜித் தொடர்ந்து கலந்து கொண்டார். அதில், சில முறை விபத்து ஏற்பட்டு அவர் உடம்பில் பலமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதேபோல் கார் ரேஸ்களிலும் தொடர்ந்து கலந்து கொண்டு வந்தார். ஆனால் திருமணத்திற்கு பின் கார் ரேஸில் கலந்து கொள்ள வேண்டாம் என ஷாலினி சொல்லியதால் அவர் கடந்த பல வருடங்களாக கார் ரேஸில் ஈடுபடவில்லை. அதேநேரம், கடந்த பல மாதங்களாகவே அஜித் கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். முதல் போட்டியாக துபாயில் கடந்த கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் டீம் கலந்து கொண்டது. அதில் பல நாட்கள் விளையாடி அஜித்தின் டீம் மூன்றாவது பரிசை வென்றது. இதற்கு பல பிரபலங்களும் வாழ்த்து சொன்னார்கள்.

சென்னையில் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். நான் அஜித் சாரோட முதல் ரேஸ் பாக்கறதுக்காக துபாய் போயிருந்தேன். அந்த ஸ்டேடியத்தில் அதிகபட்சம் 30 சீட்தான் புக் ஆகுமாம். அங்க ஒரு பெரிய ரேசர் பேர சொல்லி அவர் வந்தாலும் 40 சீட்தான் புக் ஆகுமாம்.
ஆனா அஜித் சார் ரேஸ் பண்றது தெரிஞ்சி கிட்டதட்ட 25 ஆயிரம் சீட் புக் ஆனது. ஸ்டேடியத்தை நடத்துறவங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியலயாம். அந்த ஸ்டேடிய கட்டினதுல இருந்து இந்த மாதிரி ஒரு கூட்டம் பார்த்ததே இல்லைன்னு சொன்னாங்க’ என்று பெருமிதத்தோடு பேசி இருக்கிறார். அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
