“ஒரு படத்தை இப்படியா கலாய்க்குறது…” கவலைக்கிடமான நிலையில் ஆதிபுருஷ்… படக்குழு எடுத்த அதிரடி முடிவு…
தெலுங்கின் முன்னணி நடிகரான “பாகுபலி” புகழ் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஆதிபுருஷ்”. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கிரீத்தி செனான் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பாலிவுட்டின் முன்னணி நடிகரான செயிஃப் அலி கான், தேவ்தத்தா நாகே போன்றோர் நடித்துள்ளனர்.
“ஆதிபுருஷ்” திரைப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற ஐந்து மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
சமீபத்தில் “ஆதிபுருஷ்” திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளாக்கப்பட்டது. “சுட்டி டிவிக்கு ஏற்ற திரைப்படம்”, “கார்ட்டூன் திரைப்படம்” என பலரும் கலாய்த்துத்தள்ளினர். ஆதலால் இத்திரைப்படத்தின் படக்குழுவினர் சோகத்தில் மூழ்கினர்.
“ஆதிபுருஷ்” திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி என கூறப்பட்டது. ஆனால் “இத்திரைப்படத்தின் டிரைலரை பார்த்தால் 30 கோடி கூட செலவாகியிருக்காது போலயே” போன்ற நக்கலான பேச்சுக்கள் எழத்தொடங்கின.
இது போன்ற டிரோல்களால் படக்குழு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளதாம். அதாவது “ஆதிபுருஷ்” திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்திரைப்படத்தினை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த இடைவெளிக்குள் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு வந்த டிரோல்களால் ஒரு வழியாக படக்குழு சிறந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.