“சந்தானம் சார், காமெடி எங்க சார்?”… ஏஜென்ட் கண்ணாயிரம்… சிறு விமர்சனம்
சந்தானம், “குக் வித் கோமாளி” புகழ், ரெடின் கிங்க்ஸ்லி, ரியா சுமன் ஆகியோரின் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் “ஏஜென்ட் கண்ணாயிரம்”. இத்திரைப்படத்தை மனோஜ் பீதா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து சக்கை போடு போட்ட “ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா” திரைப்படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம். சந்தானம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்திருக்கும் “ஏஜென்ட் கண்ணாயிரம்” ரசிகர்களை ஈர்த்தாரா? இல்லையா? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்
கதை
பிரைவேட் டிடெக்டிவ் ஏஜெண்ட்டாக சுற்றித் திரியும் சந்தானம், தனது அம்மாவின் இறப்பு செய்தியை அறிந்து சொந்த கிராமத்திற்கு செல்கிறார். ஆனால் சந்தானம் அங்கு செல்வதற்குள்ளேயே தாயின் சடலத்தை எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். தனது அம்மாவின் இறப்பை கூட பார்க்க முடியவில்லையே என்று தவிக்கிறார் சந்தானம்.
அந்த சமயத்தில் ஒரு பிரச்சனையால் சந்தானம் அந்த கிராமத்திலேயே தங்கும்படியான நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்போதுதான் அந்த கிராமத்தின் ஊடே செல்லும் ரயில்வே டிராக் அருகில் பல சடலங்கள் மர்மமான முறையில் கிடக்கும் தகவல் தெரிய வருகிறது. இந்த விவகாரத்தை ஏஜென்ட் கண்ணாயிரமாக இருக்கும் சந்தானம் துப்பறிய தொடங்குகிறார். அதில் அவருக்கு பல அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்கள் தெரிய வருகின்றன. இறுதியில் ஏஜென்ட் கண்ணாயிரம் குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை.
ஒர்க் அவுட் ஆகாத காமெடிகள்
வழக்கம்போல சந்தானம் தனது பாணியிலான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும், அவர் அடிக்கும் காமெடிகள், லட்சுமி வெடியின் மேல் தண்ணீரை ஊற்றியதை போல் புஸ்ஸென போய்விடுகிறது. ரெடின் கிங்க்ஸ்லி, குக் வித் கோமாளி புகழ், முனீஸ்காந்த் என நகைச்சுவையில் பின்னி பெடலெடுக்கும் நடிகர்களை வைத்திருந்தும் காமெடி காட்சிகளில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
கதாநாயகியான ரியா சுமன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அதே போல் குரு சோமசுந்தரம், ஈ.ராமதாஸ் ஆகியோர் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
எடுபடாத திரைக்கதை
மனோஜ் பீதா இதற்கு முன் இயக்கிய “வஞ்சகர் உலகம்” திரைப்படத்தில் எப்படி திரைக்கதையில் கோட்டை விட்டாரோ, “ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்படத்திலும் அதே வேலையை பார்த்திருக்கிறார். படத்தில் சில காட்சிகள் நான் லீனியராக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அது சுவாரஸ்யத்தை கொடுக்கவில்லை.
ஆறுதல்
படத்திற்கு ஆறுதல்களாக இருப்பது இசையும் ஒளிப்பதிவுமே. யுவன் ஷங்கர் ராஜா படம் முழுக்க ரெட்ரோ ட்யூனை அட்டகாசமாக பயன்படுத்தியுள்ளார். அதே போல் தேனி ஈஸ்வர், சரவணன் ராமசாமி ஆகியோரின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் காமெடியிலும் திரைக்கதையிலும் இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சிறப்பான திரைப்படமாக “ஏஜென்ட் கண்ணாயிரம்” ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கும்.