More
Categories: Cinema News latest news

“வஞ்சம் கொண்டு பழி தீர்க்கும் நந்தினி..” ஐஸ்வர்யா ராய் தான் சிறந்த தேர்வா? ஒரு ஒப்பீடு..

1950களில் அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவல், கல்கி என்ற இதழில் ஒரு நீண்ட தொடர்கதையாக வெளிவந்தது. இந்த தொடர்கதைக்கு இலக்கிய உலகில் பெரும் வரவேற்பு இருந்தது.

அதன் பின் இந்த நாவல் ஒரு முழுத்தொகுப்பாக 5 பாகங்களாக வெளிவந்தது. சோழ இளவரசனான ஆதித்த கரிகாலனின் கொலையை மையமாக வைத்து புனையப்பட்ட இந்த நாவல், சோழப் பேரரசின் பொற்கால மன்னர் என்று கூறப்படுகிற ராஜ ராஜ சோழன் அரியணை ஏறுவதற்கு முன்பாக நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.

Advertising
Advertising

இதில் ஆதித்த கரிகாலன், சின்ன பழுவேட்டரையர், பெரிய பழுவேட்டரையர், குந்தவை, பூங்குழலி, நந்தினி, அருள்மொழிவர்மன் (ராஜ ராஜ சோழன்), செம்பியன் மாதேவி, மதுராந்தகன், கந்தன்மாறன் என இன்னும் பல முக்கிய கதாப்பாத்திரங்கள் இருக்கின்றன.

இதனை திரைப்படமாக எடுக்க எம்ஜிஆரில் இருந்து பலரும் முயன்றனர். ஆயினும் இது சாத்தியப்படவில்லை. எனினும் இந்நாவலை படமாக எடுக்க 2008 ஆம் ஆண்டு முடிவெடுத்த மணி ரத்னம், இரண்டு முறை முயற்சி செய்து தவறவிட்ட பின் மூன்றாவது முறையாக முயன்று தற்போது இதனை சாத்தியப்படுத்தி உள்ளார். இந்திய சினிமாவே எதிர்பார்த்துக்கொண்டிருந்த இத்திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஏற்ற சிறந்த நடிகர்களையே தேர்வு செய்திருக்கிறார்கள் என பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக நந்தினி கதாப்பாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் சிறந்த தேர்வு என கூறி வந்தனர்.

“பொன்னியின் செல்வன்” நாவலில் நந்தினி என்ற கதாப்பாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம். நந்தினி என்பவள் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவள். ஆனால் சோழ நாட்டிற்கு கீழ் குறுநில மன்னராகவும் சோழ நாட்டின் முக்கிய அதிகாரியாகவும் திகழ்ந்து வரும் பெரிய பழுவேட்டரையரை தனது அழகால் மயக்கி சோழ அரச வம்சத்திற்குள் நந்தினி நுழைகிறாள்.

தனது காதலனான வீர பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் தலையை தன் கண் எதிரிலேயே கொய்த ஆதித்த கரிகாலனை பழி வாங்கவும், சோழ அரசை கவுக்கவும் திட்டமிடும் ஒரு வஞ்சகப் பெண் தான் நந்தினி.

நாவலாசிரியர் கல்கி நந்தினி கதாப்பாத்திரத்தை ஒரு பேரழகியாகவும் அதே நேரத்தில் ஆளை மயக்கும் கண்களை கொண்டவளாகவும் வர்ணித்திருப்பார்.

பெரும்பான்மையான வாசகர்கள் இந்நாவலை படித்த போதே இந்த கதாப்பாத்திரத்தை ஐஸ்வர்யா ராய்யுடன் தான் பொருத்திப்பார்த்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. ஏனென்றால் கல்கி வர்ணிக்கும் அந்த ஆளை மயக்கும் கண்களை உடைய பேரழகியாக நம் கண்முன் உடனே வந்து போபவர் ஐஸ்வர்யா ராய் தான்.

பல திரைப்படங்களில் அவரது கண்களை பார்த்தே சொக்கிப்போய் கிடந்தவர்கள் பலர். மணி ரத்னம் இந்நாவலை படமாக்க வேண்டும் என நினைத்தபோதே நந்தினி கதாப்பாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்தது ஐஸ்வர்யா ராய்யை தான்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வசனகர்த்தாவான ஜெயமோகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து பேசியிருந்தார். அதில் “நந்தினி என்பவள் ஒரு அழகி மட்டும் அல்ல, அவள் ஒரு கொள்ளிப்பாவை. அவ்வளவு எளிதாக அந்த கதாப்பாத்திரத்தை யாரும் உள்வாங்க முடியாது. ஆனால் ஐஸ்வர்யா ராய் அந்த கதாப்பாத்திரத்திற்கு செட் ஆனார். அவர் வஞ்சமாக பேசுகிறாரா காதல் கொண்டு பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு முகம் இருக்கிறது ஐஸ்வர்யா ராய்யிடம். அது தான் நந்தினியும்” என கூறியுள்ளார்.  இதில் இருந்து ஐஸ்வர்யா ராய்யை தவிர வேறு யாராலும் நந்தினி என்ற கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியாது என தெரிகிறது.

Published by
Arun Prasad

Recent Posts