இரண்டு ஆண்டுகளுக்கு பின் அஜித் பட பாடல் செய்த சாதனை: நிம்மதி பெருமூச்சில் ரசிகர்கள்
அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களை கொடுத்து அஜித்தின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரானார் இயக்குனர் சிவா. இதற்கு முன்னதாக இயக்குனர் சரண் மட்டுமே அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கியிருந்தார்.
சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசான படம் விஸ்வாசம். இதில் தல அஜித் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் அஜித்தின் மகளாக பேபி அனிகா நடித்திருந்தார்.
இவர் ஏற்கனவே அஜித்தின் மகளாக 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் பேட்டை படத்துடன் மோதிய விஸ்வாசம், ரஜினி படத்தை ஓரம்கட்டி முதலிடம் பிடித்தது. இப்படத்தில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக், கோவை சரளா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இப்படத்தைப்போலவே இதில் இடம்பெற்றிருந்த பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் குறிப்பாக தந்தை மகள் பாசத்தை பேசும் வகையில் தாமரை வரிகளில், சித் ஸ்ரீராம் பாடியிருந்த 'கண்ணான கண்ணே' பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
இசையமைப்பாளர் இமானுக்கு இப்படத்தின் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. இமானுக்கு தேசிய விருது கிடைக்க அந்த பாடலே முக்கிய காரணம் என கூறப்பட்டது. வெளியானபோதே மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற அந்த பாடல் தற்போது யூடியூபில் 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
அதாவது இந்த பாடலை இதுவரை 15 கோடி பேர் பார்த்துள்ளார்கள். யூடியூபில் அதிக பேரால் பார்க்கப்பட்ட வீடியோக்களில் இது 12வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மாரி-2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உள்ளது.