அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூலை அந்த படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிருவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் நடித்த நடிகர்களுக்கு கிடைத்த சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா 2 படத்தை தயாரித்து மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழ், இந்தி என பல மொழிகளில் தனது தயாரிப்பில் புதிய படங்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகிய குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி சம்பவம் செய்து வருகிறது. இதில் த்ரிஷா, பிரபு, அர்ஜூன் தாஸ், பிரியா வாரியர், பிரசன்னா, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்னதாக இயக்கிய மார்க் ஆண்டனி படத்தில் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி என்ற பழைய பாடலை பயன்படுத்தியிருந்தார். அதே போல் குட் பேட் அக்லி படத்திலும் பல பழைய பாடல்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தாலும் அனிருத் ஒரு பாடல் பாடுவதும், ஆலுமா டோலுமா பாடலை வைப்பதற்கு எல்லாம் பெரிய மனசு வேண்டும் என்கின்றனர்.
மேலும், சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் படு மோசமாக விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. அஜித் ரசிகர்களின் மனக்கவலையை தீர்ப்பதற்காகவே அவர்களுக்கென ஒரு படத்தை கொடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்றது போல் கதையை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்க அஜித் குமாருக்கு 165 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. த்ரிஷாவுக்கு 8 கோடி ரூபாயும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 12 கோடி ரூபாயும் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு 5 கோடி ரூபாயும் வில்லனாக டபுள் ஆக்ஷனில் மிரட்டிய அர்ஜுன் தாஸுக்கு 80 லட்சமும் குட்டி சிம்ரனாக சுல்தானா பாடலுக்கு குலுக்கலாக இடையழகை காட்டி ஆட்டம் போட்ட பிரியா வாரியர் செல்லத்துக்கு 15 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கி உள்ளார்கள் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக 191 கோடி ரூபாய் வரை முன்னணி நடிகர்களின் சம்பளமே உள்ளதாகவும் படத்தின் பட்ஜெட் 300 கோடியை நெருங்கும் என்கின்றனர். முதல் நாளில் 30 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் வந்துள்ள நிலையில், படம் லாபகரமாக படமாக மாறுமா என்கிற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.