Cinema News
அஜித்தான் வங்கியை கொள்ளையடிக்கிறார்ன்னு நீங்க நினைக்கலாம்… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்… “துணிவு” விமர்சனம் இதோ…
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அஜித்தின் “துணிவு” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், மகாநதி ஷங்கர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், அமீர், பாவனி, சிபி, பிரேம் குமார், மோகன சுந்தரம் என பலரும் நடித்துள்ளனர்.
“துணிவு” திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்க போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். அஜித்குமார்-ஹெச்.வினோத்-போனி கபூர் ஆகியோர் இணைந்து இதற்கு முன் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை உருவாக்கியிருந்தனர். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள “துணிவு” திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.
இந்திய அளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட “யுவர்ஸ் பேங்க்” என்னும் வங்கியை ஒரு கும்பல் கொள்ளையிட திட்டமிட்டு உள்ளே நுழைய, எதிர்பாராவிதமாக அஜித்தும் அந்த வங்கியை கொள்ளையிட, அந்த கொள்ளை கும்பலையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் அஜித்.
வங்கியின் உள்ளே கொள்ளையர்களின் பிடியில் சிக்கியிருக்கும் பொதுமக்களை காப்பாற்றும் பொறுப்பும் அஜித்தை பிடிக்கும் பொறுப்பும் கமிஷனர் சமுத்திரக்கனியிடம் வருகிறது. அஜித்தான் வங்கியை கொள்ளையடிப்பதாக பலரும் நினைக்க, ஆனால் வங்கி எப்படி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறது என்பதை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் அஜித். அஜித் ஏன் அவ்வாறு செய்கிறார்? இறுதியில் அஜித் தப்பித்தாரா இல்லையா? என்பதே மீதி கதை.
படம் முழுவதிலும் அஜித்தின் ராஜ்ஜியமே. துப்பாக்கி பிடிக்கும் ஸ்டைலிலும், வசனங்களிலும், நடை, உடை, பாவனை என எல்லா விஷயத்திலும் மிரட்டலாக வலம் வருகிறார் அஜித். இதற்கு முன் பல திரைப்படங்களில் அஜித் வெளிப்படுத்திய மேனரிசங்களை “துணிவு” திரைப்படத்தில் கொஞ்சம் மாற்றியமைத்திருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத். “மங்காத்தா” திரைப்படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க வில்லத்தனமான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் அஜித். அஜித்தின் ஒவ்வொரு அசைவும் பட்டாசாக இருக்கிறது.
எப்போதும் ஒரு டாப் நடிகர் திரைப்படத்தில் கதாநாயகிகளுக்கு அவ்வளவாக ஸ்கோப் இருக்காது. ஆனால் இதில் மஞ்சு வாரியருக்கு அதிகளவில் ஸ்கோப் கொடுத்திருக்கிறார் ஹெச்.வினோத். அஜித்துக்கு நிகராக ஆக்சன் காட்சிகளில் மஞ்சு வாரியரும் கலக்கியிருக்கிறார்.
அஜித், மஞ்சு வாரியர் ஆகியோரை தொடர்ந்து பிரேம், ஜி.எம்.சுந்தர், மோகனசுந்தரம், அமீர், பாவனி, வீரா, ஜான் கோக்கென் என பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
திரைப்படத்தில் துப்பாக்கி சத்தமும், குண்டு சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. முதல் பாதி முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளால் அசரவைத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் பணத்தை குறித்தும், கிரெடிட் கார்டு, லோன் ஆகிய அம்சங்களை வைத்து வங்கி, தங்களது வாடிக்கையாளர்களை எப்படி ஏமாற்றுகிறது என்பது குறித்தும் பல ஆச்சரியத்தக்க விஷயங்கள் கூறப்படுகிறது.
படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் போனாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாகத்தான் செல்கிறது. அதே போல் படம் நெடுகிலும் பல லாஜிக் மீறல்கள் குவிந்துகிடக்கின்றன. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவுக்கு ஆக்சன் காட்சிகளில் எந்த காயமும் ஏற்படாது என்பது கம்மெர்சியல் திரைப்படங்களில் எழுதப்பட்ட விதிதான். அதற்காக “இப்படியா?” என்பது போல் இருக்கிறது சில காட்சிகள். மேலும் கிளைமேக்ஸ் காட்சியில் லாஜிக் என்பதே மறந்துவிட்டார்கள்.
படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்திருப்பது, ஜிப்ரானின் இசை. படத்தின் வேகத்திற்கு ஏற்ப சிறப்பான இசையை தந்திருக்கிறார். படத்தில் மூன்று பாடல்களே இடம்பெற்றிருந்தாலும், அதனை காட்சியமைத்திருந்த விதம் சிறப்பாக இருக்கிறது. அதே போல் நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம். தேவையில்லாத காட்சிகளே இருக்ககூடாது என ஹெச்.வினோத் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார். இது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: “எவன்டா அவன் பீஸ்ட் 2.0ன்னு சொன்னது??”… மரண மாஸ் ஏகேவின் அதிரடி ஆட்டம்… துணிவு டிவிட்டர் விமர்சனம்…
வங்கி என்ற அமைப்பு பொதுமக்களை எப்படி எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது? பணத்தின் மீது மனிதன் ஏன் இவ்வளவு வெறி வைத்திருக்கிறான்? போன்ற கேள்விகளை அடிப்படையாக வைத்து ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் ஹெச்.வினோத். படத்தில் பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் தான் ரசிகர்களுக்கு சொல்ல வந்த விஷயத்தை சிறப்பாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத். ஆதலால் இந்த பொங்கல் “துணிவு” பொங்கல்தான் என ரசிகர்கள் மிகத் துணிவாகவே கூறலாம்.