ஃபாரின்லயும் நம்ம படம் சம்பவம் பண்ணனும்.. தயாரிப்பாளிடம் கண்டிஷன் போட்ட அஜித்..
அஜித் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகிறது. இதே நாளில் விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் வெளியாவதால் ரசிகர்கள் பெரிதளவில் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பொங்கல் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்போதே “துணிவு” மற்றும் “வாரிசு” திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது. அதுவும் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு அஜித், விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால், பொங்கல் ரேஸில் ஜெயிக்கப்போவது துணிவா? வாரிசா? போன்ற விவாதங்கள் ரசிகர்களுக்குள் எழ தொடங்கியுள்ளன.
“நேர்கொண்ட பார்வை”, “வலிமை” போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார். “வலிமை” திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றிருந்தாலும் அத்திரைப்படம் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. ஆதலால் “துணிவு” திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர். அதே போல் விஜய் இதற்கு முன் நடித்த “பீஸ்ட்” திரைப்படமும் சரியான வரவேற்பை பெறவில்லை என்பதனால் விஜய் ரசிகர்களும் “வாரிசு” திரைப்படத்திற்காக மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கியிருந்தாலும், வெளிநாடுகளில் லைகா நிறுவனம்தான் வெளியிட உள்ளது.
இந்த நிலையில் அஜித்குமார், லைகா நிறுவனரான சுபாஸ்கரனிடம் ஐரோப்பா கண்டத்தில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் “துணிவு” திரைப்படத்தை அதிக திரையரங்குகளில் இறக்க வேண்டும் என கூறியுள்ளாராம். அது மட்டுமல்லாது தமிழர்கள் மிகவும் குறைவாக இருக்கும் பகுதிகளிலும் கூட ஒரு காட்சியாவது திரையிடவேண்டும் என சுபாஸ்கரனிடம் கூறியிருக்கிறாராம் அஜித்.