“இது அந்த ஹாலிவுட் படத்தோட காப்பிதானே”… கதை சொன்ன இயக்குனரை அதிரவைத்த அஜித்குமார்…
ரசிகர்களின் ‘தல’ ஆக அறியப்படும் அஜித்குமார், தொடக்கத்தில் காதல் மன்னனாக இருந்து, அல்டிமேட் ஸ்டாராக உயர்ந்தவர். சமீப காலமாக தனது திரைப்படங்களின் புரோமோஷனுக்கு கூட வராமல் இருக்கும் அஜித்குமார், ஒரு காலத்தில் பத்திரிக்கையாளர்களோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்.
ஆனால் பத்திரிக்கையாளர்களோடு அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான், பின்னாளில் பத்திரிக்கையாளர்களை புறக்கணிக்கும் அளவுக்கான நிலைக்கு அவரை தள்ளியது. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் “அஜித் தனது கேரியரின் தொடக்க காலத்தில் பத்திரிக்கையாளர்களை அடிக்கடி சந்திப்பார். ஆனால் பத்திரிக்கையாளர்கள் கொஞ்சம் அத்துமீறி நடந்துகொள்ளத் தொடங்கினர். அதன் பிறகுதான் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை நிறுத்திக்கொண்டார்” என கூறினார்.
இவ்வாறு தனக்கென ஒரு கோடு போட்டு வாழும் அஜித்குமார், பல்வேறு துறை சார்ந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு வருபவர். அஜித்குமாருக்கு பைக் ரேஸில் ஈடுபாடு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே போல் துப்பாக்கிச் சுடுதல், விமானம் ஓட்டுதல் என பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றவர் அஜித்குமார். மற்றத்துறைகளில் இவ்வளவு அறிதலுடன் இருக்கும் அஜித்குமார், தான் சார்ந்த சினிமாத்துறையிலும் பரந்த அறிவை பெற்றவர்.
அஜித்குமார் நடித்த 50 ஆவது திரைப்படமான “மங்காத்தா”, அஜித் கேரியரிலேயே மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்தது.
அஜித்குமார் நடித்த “ஜீ” திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர்களில் ஒருவர்தான் வெங்கட் பிரபு. அதன் மூலம் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு ஒரு நாள், தான் உருவாக்க இருக்கும் “மங்காத்தா” திரைப்படத்தின் கதையை அஜித்திடம் கூறியுள்ளார் வெங்கட் பிரபு. கதையை கேட்டதும் அஜித்குமார் வெங்கட் பிரபுவிடம் என்ன கூறினார் தெரியுமா?
“இந்த கதை அந்த ஹாலிவுட் படத்தில் இருந்து உருவியதுதானே” என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இதனை கேட்ட வெங்கட் பிரபு அதிர்ந்துவிட்டாராம். எனினும் “மங்காத்தா” திரைப்படத்தில் நடிக்க அஜித்குமார் ஒப்புக்கொண்டார்.
மேலும் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன் அத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாவது வழக்கம்தான். ஆனால் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலில் டீசர் என்ற ஒன்று உருவானது “மங்காத்தா” திரைப்படத்திற்காகத்தான் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த செய்தி.