தப்பான படங்களில் நடித்தேன்!.. அதை சரி பண்ணத்தான் அந்த படம்!.. அஜித் ஃபீல் பண்ணி பேசிட்டாரே!..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். சினிமா நடிகர்களில் இவர் வித்தியாசமானவர். நடிப்பு உண்டு தான் உண்டு என ஒதுங்கியே இருப்பார். சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார். அவர் நடிக்கும் படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார். தனது ரசிகர்களையும் சந்திக்கமாட்டார்.
கடந்த 15 வருடங்களாகவே அஜித் இப்படித்தான் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களையே அவர் கலைத்துவிட்டார். ஆனாலும், அவருக்கு ரசிகர்கள் குறையவில்லை. இன்னும் சொல்லப்போனால் பில்லா, தீனா, மங்காத்தா போன்ற படங்கள் அவருக்கு ரசிகர்களை அதிகமாக்கிவிட்டது.

குட் பேட் அக்லி படம் அவரின் ரசிகர்களால் மட்டுமே ஓடி 250 கோடி வசூலை பெற்றிருக்கிறது. கோலிவுட்டின் ஸ்டைலிஷ் மாஸ் ஹீரோவாக அஜித் மாறியிருக்கிறார். அதுவும் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் எல்லோரின் கவனமும் அஜித் மீது திரும்பியிருக்கிறது.
அஜித் நிறைய தனது சினிமா அனுபவத்தில் நிறைய வெற்றி தோல்விகளை பார்த்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவரின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதை ரஜினியிடம் சொல்லி அஜித் புலம்பிய போது ‘நீங்கள் என் பில்லா படத்தை ரீமேக் செய்து நடியுங்கள்’ என சொன்னார் ரஜினி. பில்லா படம் அஜித்துக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின்னரும் பல தோல்விகளை பார்த்துவிட்டார். அவரின் விடாமுயற்சி படம் கூட எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது. இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை கார் ரேஸில் கலந்துகொண்டு அதன்பின் புதிய பட வேலைகளில் அவர் கவனம் செலுத்தவிருக்கிறார்.
அஜித் நடித்ததில் வித்தியாசமான படம் என்றால் ஹெச்.வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படத்தை சொல்ல முடியும். ஆதரவில்லாத 3 பெண்கள் ஒரு பிரச்சனையில் சிக்க வழக்கறிஞரான அஜித் அவர்களை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் கதை. இந்து ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
சமீபத்தில் டெல்லி சென்று பத்மபூஷன் விருது பெற்ற அஜித் அதன்பின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘நான் பிங்க் ரீமேக்கில் நடிக்க காரணம் என்னுடைய சில முந்தைய படங்கள் என்னை குற்ற உணர்ச்சிக்கு உள்ளக்கியது. பெண்களை ஸ்டாக்கிங் செய்வதை ஊக்குவிப்பதை போல உணர்ந்தேன். சில நேரங்களில் மக்கள் நாம் திரையில் செய்வதை பின்பற்ற விரும்புகிறார்கள். பிங்க் ரீமேக்கில் நடிப்பது என்னுடைய முந்தையை படங்களுக்கு பிராயச்சித்தமாக இருக்கும் என நினைத்தேன்’ என பேசியிருக்கிறார்.