Cinema History
திரையுலகில் திடுக்கிடும் பாலியல் புகார்கள்… தொடர்வதன் பின்னணி ரகசியம் இதுதானா…?
தற்போது திரையுலகில் மன்சூர் அலிகான் திரிஷாவைப் பற்றியும், பிக்பாஸில் விசித்ரா ஒரு சம்பவம் குறித்தும் சொன்னது ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழலில் தொடரும் பாலியல் புகார்களுக்கான பின்னணி என்ன என்பது குறித்து பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சினிமா மட்டும் ஆண்களுக்கானது. கதாநாயகிகள், பாடகிகளாகத் தான் இருப்பார்கள். அந்த நடிகை கூட ஆணின் கருத்தை முன்வைத்துத் தான் நடிப்பார்கள். அந்தப் பாடகியும் ஆணின் கருத்தை முன்வைத்து தான் பாடுவார்கள். உலகம் பெண்களால் படைக்கப்பட்டது. சினிமா மட்டும் ஆண்களால் படைக்கப்பட்டது. இயக்குனர், தயாரிப்பாளர்களில் பெண்கள் மிக மிகக்குறைவு. கதாநாயகிகள் பெண்கள் தான். வேறு வழியில்லை.
பெண் இசைக்கலைஞர்களை விரல் விட்டுக்கூட சொல்ல முடியாது. தொழிலாளர்களும் ஆண்கள் தான். விதிவிலக்காகத் தான் பெண்கள். பாடலாசிரியர், கதாசிரியர், ஒளிப்பதிவாளர் எல்லாமே ஆண்கள் தான். அரசியலில் கூட பெண்களுக்கு 33 சதவீதம் வந்துவிட்டது. சினிமாவில் 3 சதவீதம் கூட இன்னும் வரல. இதையும் தாண்டி பல ஆண்கள் பெண்ணியம் பேசி உள்ளார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பாலியல் புகார்கள் பரவலாகப் பேசப்படுகிறது. பொதுவாகவே ஆண்களின் மனநிலை அடையணும்னு இருக்கும். ஆண்களிடம் உள்ள சிக்கல் இதுதான். பணம், புகழ் வரும் நேரத்தில் எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறி ஒரு சில பேருக்கு வந்துவிடும். இது சினிமா மட்டுமல்ல. எல்லா ஆண்களிடமும் இருக்கும்.
முன்னாடி எல்லாம் கதாநாயகர்களைப் பற்றி புகார் கொடுக்கத் தயங்குவர். நமக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படுவர். ஆனால் தற்போது வெகு யதார்த்தமாக புகார்களை அள்ளி வீசுகின்றனர். தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தைரியமாக சொல்வது வரவேற்க வேண்டிய விஷயமே.
ஆனால் இது போன்ற எல்லா செய்திகளும் உண்மையா அப்படின்னு ஒரு கேள்வி இருக்கு. இது ரெண்டு தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம். அதுல எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு நமக்குத் தெரியாது.
நிறைய பேரு பணம் சம்பாதிச்சிருப்பாங்க. ஆனா அவங்க எல்லாருமே புகழை சம்பாதிக்க முடியாது. அந்தப் புகழ் மேல் கல்லெறிய பலரும் காத்திருப்பாங்க. இதற்குப் பெண்களை வைத்தே சில ஆண்கள் கேம் ஆடலாம். பாலியல் விஷயம் என்பது தனிநபர் ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். இதைத் தாண்டி இன்னொருத்தர் போக அனுமதியில்லை.
இதற்குள் கல்லெறிவது திரும்ப திரும்ப யோசிக்க வேண்டிய விஷயம். ஏன்னா ஒரு புகழ் என்பது ஒருவருக்கு சர்வ சாதாரணமா வந்து விடாது. ஒருவேளை சின்னச் சின்னத் தவறுகள் நடந்து இருந்தால் கூட இன்னைக்கு சமூக ஊடகங்கள் பெரிசு பண்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. சமூக ஊடகங்கள் எவ்வளவோ நல்ல விஷயங்களைத் தருகிறது. ஆனால் அதையும் தாண்டி ஒருசில இடங்களில் இது வேறொரு வாய்ப்பையும் திறந்து விடுகிறதோ என்ற அச்சமும் உள்ளது. அது களையப்பட வேண்டும்.