தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர். ஒருபக்கம், தெலுங்கில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் த்ரி விக்ரம். இவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து உருவான அல வைகுந்தபுரமுலோ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படமும் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.
அதேபோல், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து இரண்டு பாகங்களாக வெளிவந்த புஷ்பா மற்றும் புஷ்பா 2 ஆகிய இரண்டு படங்களும் தெலுங்கு மொழியில் உருவானாலும் தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வசூலை அள்ளியது. அதிலும் புஷ்பா 2 படம் 1800 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

அல்லு அர்ஜூன் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகிறது. வெளியான புகைப்படங்களை பார்க்கும்போது இது ஒரு சூப்பர் மேன் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அல்லு அர்ஜூனின் 22வது திரைப்படமாகும்.
ஒருபக்கம், அல்லு அர்ஜூனின் 23வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், திடீர் திருப்பமாக அல்லு அர்ஜூனின் 23வது படத்தை த்ரி விக்ரம்தான் இயக்குகிறார், இது ஒரு சரித்திரக்கதை என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகப்போவதாகவும், 2027 பிப்ரவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவிருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதைப்பார்க்கும்போது அட்லிக்கு பின் லோகேஷின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கமாட்டார் எனத்தெரிகிறது. எனவே, லோகேஷ் யாரை வைத்து படம் இயக்குவார் என்பது தெரியவில்லை. கார்த்தியை வைத்து கைதி 2 அல்லது அமீர்கானை வைத்து ஒரு படம் இயக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
